‘வேட்டையன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா; ஹைலைட்ஸ் என்னென்ன?

By KU BUREAU

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்த மாதம் வெளியாக இருக்கும் ‘வேட்டையன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்றுமாலை பிரம்மாண்டமாக நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது.

‘ஜெய்பீம்’ புகழ் ஞானவேல் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ’வேட்டையன்’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகிறது. இதனை ஒட்டி படக்குழு புரோமோஷனை தொடங்கி இருக்கிறது. படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பெயரையும் அறிமுகப்படுத்தி வருகிறது படக்குழு. அதன்படி, மஞ்சுவாரியர் தாரா கதாபாத்திரத்திலும், துஷாரா சரண்யா என்ற கதாபாத்திரத்திலும், ரித்திகா சிங் ரூபா கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள். நடிகர் அமிதாப் பச்சன் சத்யதேவ் கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார்.

மேலும், அனிருத் இசையில் ‘மனசிலாயோ...’ என்ற முதல் பாடல் வெளியாகி ஹிட்டானது. இப்போது ‘ஹண்ட்டர் வந்துட்டார்’ என்ற இரண்டாவது பாடலை வெளியிட்டுள்ளார்கள். அனிருத் இசையில் அறிவு எழுதியிருக்கும் இந்தப் பாடலை சித்தார்த் பாடி இருக்கிறார்.

இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை ‘கூலி’ படப்பிடிப்பில் இருந்து சென்னை வந்துள்ளார். அதுபோல, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், அனிருத் என படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் பாடல்கள் அனைத்தும் இசை வெளியீட்டு விழாவில் வெளியிடப்படுவதோடு, ரஜினியின் கதாபாத்திர அறிமுகமும் இசை வெளியீட்டு விழா இருக்கும் என படக்குழு அறிவித்திருக்கிறது. நிகழ்வில் அமிதாப்பச்சன் கலந்து கொள்வது பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE