தமிழ் சினிமாவில் கதாநாயகனாக, நகைச்சுவை நாயகனாக, குணச்சித்திர நடிகராக மக்கள் மனதில் இடம்பெற வேண்டும் என்பது தான் பெரும்பாலான நடிகர்களின் விருப்பமாக இருக்கும். ஆனால், வில்லனாக நடித்து பெயரெடுப்பதறகு நடிப்பின் மீது தீராத ஆர்வமும், காதலும் வேண்டும். அப்படியான காதலோடு திரைத்துறைக்குள் நுழைந்தவர் தான் நெப்போலியன். இன்று நடிகர் நெப்போலியனின் 60வது பிறந்தநாள்.
திருச்சியில் பிறந்த நெப்போலியனின் இயற்பெயர் குமரேசன் துரைசாமி. ஆறு குழந்தைகள் இருக்கும் குடும்பத்தில் ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். பின்னாட்களில் தமிழ் சினிமாவில் வில்லனாகவும், ஹீரோகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்த நெப்போலியனுக்கு நடிப்பார்வம் வந்தது திடீரென ஒரு நாளில் தான்.
திருச்சி, செயிண்ட் ஜோசப் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தவர், ஒருநாள் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் நாகர்ஜூனா நடித்த 'சிவா' என்ற தெலுங்கு படத்தின் தமிழ் டப் வெர்ஷனை பார்க்க சென்றிருக்கிறார். அந்தப் படம்தான் இவருக்கான நடிப்பாசையை விதைத்தது. நடிக்க வேண்டும் என்பதை சீரியஸாக எடுத்துக் கொண்டவருக்கு அந்த கனவு இரண்டே வருடங்களில் நிறைவேறியது.
சினிமாவில் முதல் குட்டு மோதிரக்கையால் வாங்கினால் அதிர்ஷ்டம் என்ற நம்பிக்கை உண்டு. நெப்போலியனுக்கு அது நடந்தது. 1991ம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜாவின் 'புது நெல்லு புது நாத்து' படத்தில் வில்லனாக அறிமுகமானார். அதன் பிறகு ஒரே வருடத்தில் ஆறேழு படங்களில் நடிக்கும் அளவுக்கு பிஸியான நடிகராக வலம் வந்தார்.
அதன்பிறகு, 1993ம் ஆண்டில் ரஜினியுடன் 'எஜமான்' படத்தில் இவரது வல்லவராயன் கதாபாத்திரம் வில்லனாக இவருக்கு தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கிலும் பெயர் வாங்கிக் கொடுத்தது. வில்லனாக இவரை அறிமுகப்படுத்திய இயக்குநர் பாரதிராஜாவே இவரை கதாநாயகனும் ஆக்கினார். ஆனால், ஆண்டி-ஹீரோவாக! 'கிழக்குச் சீமையிலே' படம்தான் அது. பின்பு, பிரதாப் போத்தன் இயக்கத்தில் நெப்போலியன் நடித்த 'சீவலப்பேரி பாண்டி' படம் அவரது சினிமா க்ராஃப்பில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. 1997ம் ஆண்டு வெளியான 'எட்டுப்பட்டி ராசா' படத்திற்காக இவருக்கு தமிழக அரசின் விருது கிடைத்தது.
நூற்றிற்கும் மேற்பட்டப் படங்களில் நடித்துள்ள நெப்போலியன் 2000- 2006 ம் ஆண்டு வரை தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் வைஸ் பிரசிடெண்ட்டாக இருந்தார். அதன் பிறகு அரசியலிலும் நுழைந்தார் நெப்போலியன். கடந்த 2009ம் ஆண்டு முதல் அரசியலில் இருந்து வருகிறார். திமுக சார்பில் போட்டியிட்டு ஒரு முறை எம்.எல்.ஏவாக பதவி வகித்துள்ளார். பின்னர் மத்திய அரசில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அழகிரியின் விசுவாசியாகக் கருதப்பட்ட அவர், 2014ல் திமுகவால் ஓரங்கட்டப்பட்டார். இதனால், திமுகவை விட்டு விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நெப்போலியனுக்கு தனுஷ் மற்றும் குணால் என இரு மகன்கள் உள்ளனர். தற்போது இவரது குடும்பம் அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தில் வசித்து வருகின்றனர். தனது மூத்த மகன் தனுஷூக்கு தசைவளக் குறைபாட்டு நோய் உள்ளது. எனவே தனது மகனை போல கஷ்டப்படுபவர்களுக்கு உதவ ஒரு தொண்டு நிறுவனம் நடத்தி வரும் நெப்போலியன், திரையில் மட்டும்தான் வில்லன், நிஜத்தில் ஹீரோ என்பதை நிரூபித்துள்ளார்.
தமிழ் மட்டுமல்லாது, 'டெவில்ஸ் நைட்', 'கிறிஸ்துமஸ் கூப்பன்', 'டிராப் சிட்டி' போன்ற ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார் நெப்போலியன். என்னதான் ஹாலிவுட் படங்களில் நடித்திருந்தாலும் தான் ஒரு தமிழ் நடிகர் என்பதில் தான் பெருமை என்பார் சிரித்துக் கொண்டே.