‘மெய்யழகன்’ படத்தில் சொந்த ஊர் அனுபவம்! - நடிகர் கார்த்தி தகவல்

By KU BUREAU

சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள படம், ‘மெய்யழகன்’. கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீ திவ்யா நடித்துள்ள இந்தப் படத்தை பிரேம்குமார் இயக்கியுள்ளார்.

ராஜ்கிரண், தேவதர்ஷினி, ஜேபி உட்பட பலர் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மகேந்திரன் ஜெயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வரும் 27-ல் வெளியாகும் இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

நடிகர் கார்த்தி பேசும் போது, “மெய்யழகன் கதையைப் படித்தபோது 6 இடங்களில் எனக்குக் கண்ணீர் வந்தது. எல்லோருக்குமே ஒரு தேடல் இருக்கிறது. தீபாவளி, பொங்கல் காலங்களில் சென்னையில் இருந்து எல்லோருமே ஊருக்குச் செல்கிறார்கள். சென்னையே காலியாகி விடுகிறது. அந்த அளவுக்கு மக்கள் சொந்த ஊரை நேசிக்கிறார்கள். இந்தப் படமும் அப்படியொரு அற்புதமான அனுபவத்தை உங்களுக்குக் கொடுக்கும்.

கைதி படத்தில் நடித்தபோது முழுவதும் இரவு நேர படப்பிடிப்பு தான். லோகேஷ் கனகராஜ் சண்டைக் காட்சிகளாகக் கொடுத்து பெண்டு நிமிர்த்தி விட்டார். அதற்கடுத்து இந்தப் படத்தில்தான் இரவு நேரக் காட்சிகள் அதிகம். ஆனால், இதில் சண்டைக் காட்சியே இல்லை.

‘இந்தக் காட்சிகளில் இருக்கும் உணர்வுகளைக் குறையாமல் திரையில் கொண்டு வந்தாலே இந்தப் படத்துக்குப் பெரிய வெற்றியாக இருக்கும்’ என்று நானும் அரவிந்த்சாமி சாரும் பேசிக்கொண்டோம். படம் முழுவதும், ‘அத்தான் அத்தான்’ என அரவிந்த்சாமியை டார்ச்சர் செய்யும் கதாபாத்திரம் எனக்கு. சுவாரஸ்யமாக இருக்கும்' என்றார். அரவிந்த்சாமி, தேவதர்ஷினி உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE