நடனக் கலைஞருக்கு பாலியல் தொல்லை: ஜானி மாஸ்டர் மீது வழக்குப்பதிவு!

By KU BUREAU

தேசிய விருது பெற்ற பிரபல கொரியோகிராஃபர் ஜானி மாஸ்டர் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் டிரெண்டான ‘புட்டபொம்மா’, ‘அரபிக்குத்து’, ‘ஜாலியோ ஜிம்கானா’ போன்ற பல பாடல்களுக்கு நடனம் அமைத்தவர் ஜானி மாஸ்டர். ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் இடம்பெற்ற ‘மேகம் கருக்காதா...’ பாடலின் நடன வடிவமைப்பிற்காக இவருக்கு சமீபத்தில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மலையாளத் திரையுலகில் ஹேமா கமிட்டி பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து திரைத்துறையைச் சேர்ந்த பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை முன்வந்து சொல்லி வருகின்றனர். மலையாளம் மட்டுமல்லாது, தெலுங்கு, தமிழ் சினிமாத் துறையிலும் இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், ஜானி மாஸ்டர் மீது 21 வயது பெண் நடனக் கலைஞர் ஒருவர் பாலியல் தொல்லை புகார் கொடுத்திருப்பது திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜானி மாஸ்டரின் நடனக் குழுவில் உள்ள இந்த பெண் நடனக் கலைஞர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சைபராபாத்தில் உள்ள ராய்துர்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். சென்னை, மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் வெளிப்புற படப்பிடிப்பின் போது ஜானி மாஸ்டர் இந்த பெண் நடனக் கலைஞரை பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தி இருப்பதாக அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது. முதலில் ராய்துர்கத்தில் ஜீரோ எப்ஐஆராக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு தற்போது விசாரணைக்காக நரசிங்கி போலீஸாருக்கு மாற்றப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE