மணிமேகலையின் விலகலும், பிரியங்கா மீதான விமர்சனங்களும் - நடந்தது என்ன? 

By KU BUREAU

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளி’. முதல் சீசனிலேயே பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இத்தொடரின் ஐந்தாவது சீசன் தற்போது நடந்து வருகிறது. கடந்த சீசன்களாக இந்த நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாக இருந்த மணிமேகலை நேற்று தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

அதில் குக் வித் கோமாளியில் குக்-ஆக கலந்து கொள்ளும் விஜய் டிவியின் முக்கிய பெண் தொகுப்பாளினி ஒருவர் சமையல் செய்வதை தாண்டி தன்னுடைய ஆங்கர் பணியில் தொடர்ந்து தலையிட்டு வருவதாகவும், இது குறித்து பலமுறை நிர்வாகத்திடம் முறையிட்டும் பலனில்லை என்றும் தெரிவித்திருந்தார். மேலும் சுயமரியாதை மிகவும் முக்கியம் என்பதால் இந்த நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக மணிமேகலை அறிவித்திருந்தது குக் வித் கோமாளி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் ஒரே ஆங்கர் பிரியங்கா தேஷ்பாண்டேதான் என்பது அனைவருக்கும் தெரியும். மணிமேகலை அவரது குறிப்பிடவில்லை என்றாலும் அனைவரும் இதை சரியாக கணித்து பிரியங்காவை கடுமையாக விமர்சிக்க தொடங்கிவிட்டனர். பிக் பாஸ் ஐந்தாவது சீசனின் போது பிரியங்கா செய்தவற்றை எல்லாம் சமூக வலைதளங்களில் வீடியோ கிளிப்களாக பதிவிட்டு விமர்சித்து வருகின்றனர்.

விஜய் டிவியின் முக்கிய ஆங்கர்களில் ஒருவராக இருக்கும் பிரியங்கா, சூப்பர் சிங்கர், சூப்பர் சிங்கர் ஜூனியர், ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட பெரும்பாலான நிகிழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். நிகழ்ச்சிகளை கலகலப்பாகவும், நகைச்சுவையாகவும் தொகுத்து வழங்குவது இவரது பாணி. பிக் பாஸ் 5வது சீசனில் கலந்து கொண்டபோது பிரியங்காவின் செயல்பாடுகள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. அப்படி இருந்தும் அவர் ரன்னராக அறிவிக்கப்பட்டது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, குக் வித் கோமாளியில் தற்போதைய சீசனில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார் பிரியங்கா. இதே நிகழ்ச்சியில் கடந்த நான்கு சீசன்களாக கோமாளியாக வந்த மணிமேகலை இந்த சீசனில் தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார். குக் வித் கோமாளியின் வெற்றியே மற்ற நிகழ்ச்சிகளைப் போல எழுதி வைத்துக் கொண்டு பேசாமல் அந்தந்த நேரத்தில் கோமாளிகள் அடிக்கும் கவுன்ட்டர்கள் தான். ஏற்கெனவே பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்த மணிமேகலை, சூப்பர் சிங்கரில் கலந்து கொண்டு வெளியேறிய சிவாங்கி, நடன நிகழ்ச்சிகளில் பிரபலமான சுனிதா உள்ளிட்டோர் இந்த குக் வித் கோமாளியின் மூலம் மிகவும் பிரபலமடைந்தனர். அவர்களின் நகைச்சுவை திறனும் சமூக வலைதளங்களில் பாராட்டப்பட்டது.

இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பே கடந்த நான்கு சீசன்களாக குக் வித் கோமாளியை நடத்தி வந்த மீடியா மேசன்ஸ் நிறுவனம் விஜய் டிவியிலிருந்து விலகியதால், இதுவரை நடுவராக இருந்துவந்த வெங்கடேஷ் பட்-டும் விலகினார். அவருக்கு பதில் தற்போது மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக இருந்துவருகிறார். அதேபோல முந்தைய சீசன்களில் கோமாளிகளாக இருந்த பலரும் விலகி விட்டனர்.

இந்த சூழலில், இந்த சீசனில் போட்டியாளராக பங்கேற்ற பிரியங்கா, ஆரம்பம் முதலே மணிமேகலை ஆங்கரிங் செய்யும்போது தலையிட்டு திருத்தங்கள் செய்ததாக கூறப்படுகிறது. நிகழ்ச்சியின் சில எபிசோடுகளிலேயே கூட அவ்வப்போது நகைச்சுவையாக பிரியங்கா மேடையில் ஏறி ஆங்கரிங் செய்து காட்டியுள்ளார். இது மணிமேகலைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக தெரிகிறது. இது குறித்து புதிய நிர்வாகத்திடம் பலமுறை தான் முறையிட்டும் அவர்கள் அதைவைத்து தன்னையே குற்றம்சாட்டுவதாக மணிமேகலை தன்னுடைய பதிவில் தெரிவித்துள்ளார்.

மணிமேகலையின் இந்த குற்றச்சாட்டை வைத்து சமூக வலைதளங்களில் பலரும் பிரியங்காவை விமர்சித்து வருகின்றனர். அதிலும் சிலர் அவரை தனிப்பட்ட முறையில் சாடி வருகின்றனர். ஏற்கெனவே ஆங்கர்களாக இருந்த டிடி, பாவனா, ஜாக்குலின் போன்றவர்களை எல்லாம் பிரியங்கா ஓரங்கட்டி விட்டார் என்றும் குற்றம்சாட்டி வருகின்றனர். தன்னுடைய வேலையை பிரியங்காதான் காலி செய்து விட்டதாக வெளியான ஒரு செய்திக்கு தொகுப்பாளர் பாவனா மறுப்பு தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். இன்னும் சிலர், மணிமேகலை இதுகுறித்து நேரடியாகவே பிரியங்காவிடம் பேசி சரிசெய்திருக்கலாம், அதை விடுத்து சமூக வலைதளங்களில் இப்படி செய்திருக்க வேண்டியதில்லை என்றும் கூறுகின்றனர்.

மணிமேகலை குக் வித் கோமாளியிலிருந்து விலகுவது இது முதல் முறையல்ல. கடந்த சீசனில் கோமாளியாக இருந்துவந்த அவர், திடீரென ஒருநாள் இந்த நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக பதிவிட்டிருந்தார். அதன் பிறகு சில வாரங்களிலேயே மீண்டும் தொகுப்பாளராக மீண்டும் நிகழ்ச்சிக்குள் வந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE