‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இருந்து தொகுப்பாளர் மணிமேகலை வெளியேறியுள்ளார். இது தொடர்பாக சமூக வலைதள பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2019 முதல் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. தற்போது ஒளிபரப்பாகும் இதன் ஐந்தாவது சீசனை தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தளத்தில் பார்க்கலாம். இதில் தொகுப்பாளர் மணிமேகலையும் தனது பங்களிப்பை இதுநாள் வரையில் வழங்கி வந்தார்.
“இனி குக் வித் கோமாளியில் நான் பங்கேற்க மாட்டேன். எனது பணியில் 100 சதவீத ஈடுபாட்டுடன் நான் பணியாற்றுவது வழக்கம். அதே பாணியில்தான் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியிலும் நான் என் வேலையை செய்தேன்.
இதன் மூலம் புகழ், பணம், தொழில், வாய்ப்பு என அனைத்தையும் பெற்றுள்ளேன். ஆனாலும் அதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். அதைவிட சுயமரியாதை என்பது மிக முக்கியம். அதனால்தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறேன். இனி நான் இதில் இல்லை.
» திருச்சி தெற்கு மாவட்ட திமுக நிர்வாகி கர்லாக் கட்டையால் அடித்துக் கொலை - அண்ணனிடம் விசாரணை
» அம்பத்தூர் அருகே ஆள்மாறாட்டம் செய்து ரூ.1 கோடி மதிப்பிலான நிலம் அபகரிப்பு: பெண் கைது
இந்த சீசனில் போட்டியாளராக பங்கேற்றுள்ள பெண் தொகுப்பாளர் ஒருவர், தான் வந்த நோக்கத்தை மறந்து விட்டு தொகுப்பாளராக செயல்படுகிறார். என் வேளையில் குறுக்கிடுகிறார். எனது தரப்பு வாதங்களும் ஏற்கப்படவில்லை. அதனால் இதில் இருப்பதைவிட வெளியேறுவதே மேல் என முடிவு செய்து விட்டேன்.
என்னுடைய தொகுப்பாளர் கேரியரில் இது மாதிரியான சங்கடத்தை நான் எதிர்கொண்டது இல்லை. என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய நபருக்கு ஆண்டவன் வாய்ப்பையும், பல நிகழ்ச்சிகளையும் வழங்க வேண்டுகிறேன். வாழு, வாழ விடு” என மணிமேகலை தெரிவித்துள்ளார்.