தன்னுடைய துறு துறு நடிப்பாலும், பட பட கண்களாலும் பாலிவுட்டை கலக்கும் பஞ்சாபி பொண்ணு யாமி கெளதம் இன்று தனது 35வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். நம்மூர் த்ரிஷா, நயன்தாராக்களுக்கு எல்லாம் சர்ச்சைகளைக் கடந்து சாதித்ததில் முன்னோடி யாமி கெளதம்.
’உல்லாச உத்சாஹா’ என்ற கன்னட படம் மூலம் திரையுலகிற்கு யாமி அறிமுகமானாலும் அவருக்கு சினிமா புதிதல்ல. யாமியின் அப்பா முகேஷ் கெளதம் பிரபல பஞ்சாபி இயக்குநர். ஹிமாச்சலப் பிரதேசத்தில் பிறந்தாலும் யாமி வளர்ந்தது எல்லாமே சண்டிகரில் தான். சிறுவயதில் ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என ஆசைப்பட்ட யாமி கல்லூரிப் படிப்பில் தேர்ந்தெடுத்தது லா ஹானர்ஸ்.
ஆனால், லா ஹானர்ஸ் படித்துக் கொண்டிருந்த போதே நடிப்பார்வமும் சேர்ந்து கொள்ள முழுநேர கல்லூரி படிப்பில் இருந்து விலகி, பார்ட் டைமாக சட்டப்படிப்பைத் தொடர்ந்தார் யாமி.
அதன் பிறகு பஞ்சாபி, தெலுங்கு மொழிகளில் ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் பாலிவுட்டில் இவர் அறிமுகமான ‘விக்கி டோனர்’ ரசிகர்களிடையே பிரபலமாக்கியது. இந்தப் படம் பின்னாட்களில் ‘தாராள பிரபு’வாக ரீமேக் ஆகி தமிழில் வெளியானது. ‘விக்கி டோனர்’ படம் மூலமாக நடிகர் ஆயுஷ்மான் குரோனா அறிமுகமானார். முதல் பாலிவுட் படத்திலேயே தனது திறமையை நிரூபித்ததுடன் இந்தப் படத்திற்காகப் பல விருதுகளையும் வென்றிருந்தார் யாமி.
பாலிவுட்டில் முதல் படம் ஹிட் கொடுத்ததும் அடுத்து தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் கவனம் செலுத்தினார். தமிழில் ‘கெளரவம்’ படத்தின் மூலம் அறிமுகமானாலும், இவருக்கு பாலிவுட் விரித்த சிவப்பு கம்பளத்தை கோலிவுட்டும், டோலிவுட்டும் தரவில்லை.
கெரடோசிஸ் பிலாரிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் யாமி. இந்த நோயால் தோல் புடைத்து தடிமனாக காணப்படுவதோடு திட்டுகளும் அதிகம் வரும். இதுமட்டுமல்லாது, சில நேரங்களில் வறண்டு விடும். இதுகுறித்து மனம் திறந்த யாமி, ‘இந்த நோயுடன் நான் பல ஆண்டுகளாக போராடி வருகிறேன். இது வலியை கொடுக்காது என்பதால், இந்த நோயுடன் வாழ பழகிக்கொண்டேன். இருப்பினும் இந்த நோய்க்கு எந்த சிகிச்சையும் இல்லை’ என உருக்கமாகக் கூறினார்.
திரைத்துறையில் யாமி ஜொலித்தாலும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாதவர். ’சனம் ரே’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அதன் ஹீரோ புல்கித் சர்மாவுடன் டேட்டிங் செய்தார் யாமி என்பதை புல்கித்தின் மனைவி பொதுவெளியில் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது. பின்பு, கடந்த 2021ம் ஆண்டு இயக்குநர் ஆதித்யா தர் உடன் இருவீட்டார் சம்மதத்துடனும் திருமணம் செய்தார் யாமி.
பிரபல ஃபேர்னஸ் கிரீம் ஒன்றில் முகமாக சில ஆண்டுகள் இருந்தார் யாமி. இதில் கருப்பாக இருக்கும் பெண் கவலையாகவும் அவளை சிலபேர் கிண்டல் செய்வது போலவும் பின் அவள் அந்த ஃபேர்னஸ் கிரீம் உபயோகப்படுத்தி சிவப்பானதும் மகிழ்ச்சியாகவும அவளை பல பேர் விரும்புவதாகவும் அந்த விளம்பரம் வடிவமைக்கப்பட்டிருக்கும். இதற்கு யாமி கெளதம் இணையத்தில் எதிர்வினையை சந்தித்ததுடன் கடுமையாக கேலியும் செய்யப்பட்டார். பின்பு, அந்த நிறுவனத்துடன் இதுகுறித்து பேசி கருப்பானவர்களை இதுபோன்று காட்சிப்படுத்துவதில் தனக்கு உடன்பாடு இல்லை எனத் தெரிவித்தார்.
சமீபத்தில் அக்ஷய்குமாருடன் இவர் இணைந்து நடித்த ‘OMG 2' திரைப்படத்தின் சில காட்சிகள் சர்ச்சையக் கிளப்பியது. ஆனால், இந்த வருடத்தின் அதிக வசூல் செய்த பாலிவுட் படங்களில் இந்தப் படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.