இசையமைப்பாளர் இளையராஜா இசை நிகழ்ச்சியில் குழப்பம்: கும்பகோணத்தில் பரபரப்பு!

By KU BUREAU

தஞ்சை: கும்பகோணத்தில் தனியார் கல்லூரியில் நடைபெற உள்ள இசைஞானி இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு எத்தனை பேர் வருவார்கள் என்ற விவரம் கிடைக்காததால் போலீசார் குழப்பமடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் -சென்னை பிரதான சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் இசைஞானி இளையராஜா அவர்களுடைய இசை நிகழ்ச்சி இன்று மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு கடந்த ஒரு மாதம் காலமாக விளம்பரம் செய்யப்பட்டு வந்தது. நிகழ்ச்சிக்கான டிக்கெட் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. நிகழ்ச்சியின் டிக்கெட் விற்பனை நேற்று வரை கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டது எனத் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த இசை நிகழ்ச்சிக்கு எத்தனை பார்வையாளர்கள் வருவார்கள் எவ்வளவு கூட்டம் வரும் என்ற விபரம் கிடைக்காததால் போலீஸார் குழப்பம் அடைந்துள்ளனர். இருப்பினும் இந்த இசை நிகழ்ச்சிக்கு 400-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த தயார் நிலையில் இருந்து வருகின்றனர். காலையிலிருந்து நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இசை நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் இல்லாததால் இந்த இசை நிகழ்ச்சிக்கு எவ்வளவு பேர் வருவார்கள் என்ற விவரத்தை நேரடியாக கேட்டு அறிய முடியாமல் போலீஸார் திகைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், கல்லூரி நிர்வாகத்திற்கும் நிகழ்ச்சிக்கு எத்தனை பார்வையாளர்கள் வருவார்கள், எவ்வளவு கூட்டம் வரும் என்ற விபரம் தெரியவில்லை என்கின்றனர். இளையராஜா இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், கல்லூரி நிர்வாகத்துடன் தற்போது தொடர்பில் இல்லாததால் அவர்கள் நேரடியாக கேட்டு அறிய முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுபோன்று சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற இசையமைப்பாளர் ஏ .ஆர். ரஹ்மானுடைய இசை நிகழ்ச்சியில் பாதுகாப்பு குளறுபடிகளால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதனால், பாதுகாப்பு பணியில் குளறுபடி ஏதும் ஏற்படாத வகையில், முன்னேற்பாடுகள் செய்ய வேண்டுமென அதிகாலையில் இருந்து போலீஸார் பாதுகாப்பு பணிகளை தீவிரமாக கவனித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE