நடிகர் கருணாகரனின் தந்தை இன்று காலை உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து நடிகர் கருணாகரனுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
’சூது கவ்வும்’, ‘ஜிகர்தண்டா’, ‘இன்று நேற்று நாளை’ உள்ளிட்டப் பல படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் கருணாகரன். சினிமாவில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இவரது யதார்த்தமான நடிப்பும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. சமீபத்தில் இவரது நடிப்பில் ‘டபுள் டக்கர்’ படம் வெளியானது. நடிகர் கார்த்தியின் ‘மெய்யழகன்’ மற்றும் ‘சூர்யா44’ படங்கள் தற்போது இவரது கைவசம் உள்ளது. இந்நிலையில், கருணாகரனின் தந்தை காளிதாஸ் (77) உடல்நலக் குறைவால் காலமாகியுள்ளது திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் இவர் சிகிச்சை பெற்று வந்த காளிதாஸ், கேபினட் செயலக சிறப்புப் பிரிவின் ஓய்வு பெற்ற அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
‘தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்து 37 ஆண்டுகள் சேவையாற்றிய என் தந்தை இன்று உயிரிழந்தார். இவரின் இறுதிச்சடங்கு இன்று மாலை 3 மணி அளவில் பெசன்ட் நகரில் நடைபெற உள்ளது” என்று நடிகர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.
» இயக்குநர் சங்கத்திற்கு ஒவ்வொரு வருடமும் ரூ.10 லட்சம் நிதியுதவி: ஐஸ்வர்யா ரஜினி அறிவிப்பு!
» கூலியில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன்? - நெகிழ்கிறார் உபேந்திரா