இயக்குநர் சங்கத்திற்கு இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வருடம் ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்குவதாகக் கூறியுள்ளார்.
இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்களின் வாரிசுகளுக்கு இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வருடாவருடம் ரூ.10 லட்சம் கல்வி உதவி வழங்குவதாக உறுதி அளித்துள்ளார். இதன் முதற்கட்டமாக 2024 ஆம் ஆண்டிற்கு நேற்று ரூ.5 லட்சம் நிதியை சங்கத் தலைவர் ஆர். வி. உதயகுமாரிடம் வழங்க செயலாளர் பேரரசு , பொருளாளர் சரண் , பெப்ஸி தலைவர் ஆர்.கே. செல்வமணி ஆகியோர் இணைந்து பெற்றுக்கொண்டனர். நிர்வாகிகள்- இயக்குநர்கள் எழில், சி. ரங்கநாதன், மித்ரன் ஜவகர், எஸ்.ஆர்.பிரபாகரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஐஸ்வர்யாவிற்கு நன்றி தெரிவித்தனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியதாவது, “என்னுடைய படம் முடித்ததும் என் டீமில் இருந்த உதவி இயக்குநர்களுக்கு நான் உதவி செய்தேன். இந்த விஷயம் வெளியில் தெரிந்ததா எனத் தெரியவில்லை. பல உதவி இயக்குநர்கள் குடும்பத்தினரிடம் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்புகள் வந்தது.
படிக்க வைக்க முடியவில்லை, வேலையில்லை என பல காரணங்கள். இதில் எது உண்மை, உதவி செய்தாலும் சரியானவர்களிடம் போய் சேருமா எனப் பல குழப்பங்கள் எனக்கு இருந்தது. அப்போதுதான் இயக்குநர் சங்கத்தின் உதவியை நாடினேன். அவர்களின் வழிகாட்டுதலோடு இயக்குநர் சங்கத்தின் உறுப்பினராக என்னால் வருடாவருடம் எவ்வளவு முடியுமோ அந்த உதவியை செய்யலாம் என்று இருக்கிறேன். இதன் மூலம் பயன்பெறும் குடும்பம் மகிழ்ச்சி அடைந்தால் அதுவே எனக்குப் போதும். இதை நான் உழைத்த பணத்தில் இருந்து செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். அதுவே எனக்கு பெருமை” என்றார்.