கொடைக்கானலில் குவியும் சுற்றுலாப் பயணிகள்... வசூலில் வாரிக் குவிக்கும் குணா குகை

By பி.டி.ரவிச்சந்திரன்

மஞ்சும்மல் பாய்ஸ் படம் பார்த்துவிட்டு கொடைக்கானலுக்கு அதிகம் வரும் சுற்றுலாப் பயணிகளால், அங்குள்ள இதர சுற்றுலாத்தலங்களை விட குணா குகை வசூலில் வாரிக்குவித்துவருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், கோடை வாசஸ்தலமாக இருந்தபோதும் கோடையில் மட்டுமின்றி ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. குறிப்பாக கோடை காலத்தில் கொடைக்கானலே திணறும் வகையில் சுற்றுலாபயணிகள் குவியும் நிகழ்வு ஆண்டுதோறும் நடக்கிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், வாகனங்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுவரும் அளவுக்கு இந்த கூட்டம் அதிகரித்து வருகிறது.

இரும்பு தடுப்புகளால் மூடப்பட்ட குணா குகை

இந்நிலையில் மலையாள படைப்பான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் கடந்த பிப்ரவரி இறுதி வாரத்தில் வெளியாகி, தமிழகத்திலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் வெளியான சில தினங்களிலேயே ரசிகர்களின் வாய்வழி சிலாகிப்புகள் மற்றும் சமூக ஊடக விமர்சனங்கள் அதிகரித்தன. இதனால் அதிக தியேட்டர்களில் இந்த படம் தற்போது திரையிடப்பட்டு மக்களின் ஆதரவை அள்ளி வருகிறது.

மஞ்சுமல்பாய்ஸ் திரைப்படத்தை பார்த்தவர்கள் ஒரு முறையாவது கொடைக்கானலில் உள்ள குணா குகை பகுதியை பார்த்துவிடவேண்டும் என்ற ஆர்வத்துக்கு ஆளாகின்றனர். இதனால் குணா குகையை குறிவைத்து மார்ச் துவக்கம் முதல் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. தமிழகம் மட்டுமின்றி கேரள மாநிலத்தில் இருந்தும் அதிகமானோர், திரைப்படம் பார்த்த சூட்டில் குணா குகையை காண கொடைக்கானல் வருகின்றனர்.

வனத்துறை ஊழியர் ஒருவர் கூறுகையில், ”வனத்துறை செக்போஸ்ட்டில் வாகனம் நுழையும்போதே குணா குகை எங்கு உள்ளது என கேட்டவாறே உள்ளே வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஏராளமானோருக்கு இந்த கேள்விக்கான பதிலை சொல்லி வருகிறேன்” என்கிறார்.

குணா குகை சுற்றுலா தலம்

கொடைக்கானலில் இதர சுற்றுலாத்தலங்களை காண ஆர்வம் காட்டுவதை விட குணா குகையை காண அதிகமானோர் ஆர்வம் காட்டுவதால், குணா குகைக்கான வருமானமும் அதிகரித்துள்ளது. வனத்துறை சார்பில் குணா குகை பகுதிக்கு செல்ல ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. டிக்கெட்டின் அடிப்படையில் மார்ச் 1-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை குணா குகைக்கு 46 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதன்மூலம் ரூ.4.60 லட்சம் இதுவரை வசூலாகியுள்ளது. இந்த வகையில் பிற சுற்றுலாத்தலங்களின் கட்டண வசூலை விட குணா குகையில் வனத்துறைக்கு வசூல் எகிறி வருகிறது. திரையரங்குகளில் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் வசூலில் வாரிக்குவிக்க, அதற்கு இணையாக கொடைக்கானல் குணா குகை பகுதியும் வசூலில் வாரிகுவித்து வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE