மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அஜித்... 'தல' ரசிகர்கள் உற்சாகம்!

By காமதேனு

காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கத்திற்காக அறுவை சிகிச்சை முடிந்த நிலையில், இன்று காலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் நடிகர் அஜித்குமார்.

‘துணிவு’ படத்திற்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார் நடிகர் அஜித். அஜர்பைஜான் நாட்டில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து, 2வது கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு தயாராகி வருகிறது. சமீபத்தில் சென்னைக்கு திரும்பிய நடிகர் அஜித்குமார், குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வந்தார். இந்நிலையில், கடந்த 7ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளையில் கட்டி இருப்பதாகவும், அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாகவும் தகவல் பரவியது. இதையறிந்து அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்க நிலையில், நேற்றும் மருத்துவமனையில் அஜித்குமார் சிகிச்சையில் இருந்தார். இதனால் அஜித்தின் உடல் நிலை குறித்து ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியது. இதையடுத்து அஜித் உடல் நிலை குறித்து, அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்தார். "அஜித்குமார் முழு உடல் பரிசோதனை செய்தபோது, காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பு வீக்கம் அடைந்து இருப்பது தெரியவந்தது. இதற்காக மருத்துவர்கள் சிறிய சிகிச்சை அளித்து, 7ம் தேதி இரவே அவரை சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், மருத்துவமனையில் இருக்கிறார்.

அஜித் குமார்

அனைத்து மருத்துவ பரிசோதனை முடிந்து, அஜித்குமார் நாளை வீடு திரும்புவார். ஆனால், மூளையில் கட்டி என்பதில் உண்மை இல்லை. திட்டமிட்டபடி அடுத்த வாரம் அஜர்பைஜானில் நடக்கும் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பில் பங்கேற்பார்" என்று அவரது மானேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார். இதைக் கேட்டு அஜித் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.

இந்நிலையில், நேற்று அறுவை சிகிச்சை முடிந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து இன்று காலை அஜித்குமார் வீடு திரும்பினார். இதுகுறித்து பேசிய நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா,"அஜித் உடல்நிலை குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். அடுத்தவாரம் நடக்கும் விடாமுயற்சி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் நிச்சயம் அவர் பங்கேற்பார்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE