தனது 39-வது பிறந்த நாளை கணவர், குழந்தைகளோடு குதூகலமாய் கொண்டாடி முடித்திருக்கிறார் நயன்தாரா. ஏற்கெனவே கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து தொடங்கிய ‘ரௌடி பிக்சர்ஸ்’ மூலம் படங்கள் தயாரிப்பதில் மும்முரமாக இருந்தான் நயன். ஆனால் தொடர்ச்சியாக அந்தப் படங்கள் நஷ்டப் பாதைக்கு இழுத்துச் சென்றதால், இப்போது தயாரிப்பு வேலைகளை மூட்டைகட்டி வைத்துவிட்டு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கிறார்.
தமிழில் அவர் நடித்த ‘அன்னபூரணி’ படம் ரிலீஸுக்குக் காத்திருக்கிறது. அடுத்ததாக ‘டெஸ்ட்’, ’மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. இப்போதைக்கு அவரது மவுசு குறையப் போவதில்லை. புதிதாக ஒப்புக்கொண்டுள்ள இரண்டு படங்களுமே புதுமுக இயக்குநர்கள் இயக்கும் படங்கள். இன்னும் புதுமுக இயக்குநர்களின் திறமையை ஆழமாக நயன்தாரா நம்புவதன் பின்னணியில் இருக்கும் காரணம் என்ன? நயன்தாராவை வைத்து ‘மாயா’ என்கிற பிளாக் பஸ்டர் வெற்றியைக் கொடுத்த அஸ்வின் சரவணனிடம் பேசினோம்.
நயன்தாரா பற்றி சுருக்கமாகவும் நறுக்கென்றும் அவர் பகிர்ந்துகொண்டதிலிருந்து...
“வெற்றியின் உச்சம் தொட்டபிறகு பெரும்பாலான நட்சத்திரங்கள் கொஞ்சம் சுணங்கிவிடுவார்கள். அப்படியொரு ஸ்லோ டவுண் நயன்தாராவிடம் இல்லை. அதிகாலை 6 மணிக்கு ஷூட் என்றால், காட்சிக்கான காஸ்ட்யூம், மேக்-அப்புடன் அதிகாலை 5.15 மணிக்கே ஸ்பாட்டில் வந்து நிற்பார். அவ்வளவு சீக்கிரம் வந்தாலும் கேரவனுக்குப் போகமாட்டார். நேரே ஸ்பாட்டுக்குத்தான் வருவார்.
‘மாயா’ படத்தில் அவருடன் பணியாற்றிய 35 நாட்களுக்கும் இந்த ஒழுங்கையும் சின்சியாரிட்டியையும் கண்டேன். ஒழுங்கு என்பது தொடர்ச்சி அறுபடாத ஒன்றாக இருக்கவேண்டும். அந்தக் கன்சிஸ்டன்சியை நயன்தாராவிடம் பார்க்கலாம். ‘நாம லேட்டா வந்தாலும் யாரும் ஒன்னும் சொல்லமாட்டாங்க’ என்ற இடத்துக்கு வந்துவிட்ட பிறகும் இப்படி முழுமையான தொழில் பக்தியுடன் நடந்துகொள்வதைப் பார்த்து வியந்திருக்கிறேன்.
சரி, நம் படத்துக்கு மட்டும்தான் இப்படியா... இல்ல எல்லாப் படங்களுக்கும் இப்படித்தானா என்றால், நயன்தாராவுக்குச் சிறிய படம், பெரிய படம், பெரிய ஹீரோ, சின்ன ஹீரோ என்ற பாகுபாடு சுத்தமாகக் கிடையாது. எல்லோருக்கும் ஒரேவிதமான உழைப்பையும் ஈடுபாட்டையும் தருபவர்.
தொழில் தர்மம் என்று வந்துவிட்டால் யாருக்காகவும் காம்ரமைஸ் செய்துகொள்ளமாட்டார். யாருக்காகவும் தன் வேலைமுறையை விட்டுக்கொடுக்கவும் மாட்டார். ஒவ்வொரு படத்தையும் தனது முதல் படம்போல் நினைத்து வேலை செய்யக்கூடியவர்.
ஒரு நடிகையாக நயன்தாராவுக்கு அதிக விளக்கங்கள் கொடுக்கவேண்டியதில்லை. முதலில் கதைச்சுருக்கத்தைப் படித்துவிட்டு, பிடித்திருந்தால் கதைகேட்க அழைப்பார். முழுக்கதையும் பிடித்துவிட்டால் பிறகு படப்பிடிப்பில் அவருக்குக் காட்சியை விளக்கிச் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை அவரே புரிந்துகொண்டு அந்தக் காட்சியைக் கச்சிதமாக நடித்துக்கொடுத்துவிடுவார். அந்த அளவுக்கு ஷார்ப். இயக்குநரின் நடிகையாக இருக்கவே நயன்தாரா விரும்புவார்.
அவருக்கு நிறைய ஆலோசனைகள் கொடுக்கவேண்டாம். நிறைய ஜானர்களில் நடித்திருப்பதால் கதாபாத்திரத்தை உள்வாங்கிக் வெளிப்படுத்துவதில் அவர் நிஜமான ‘மாயா’. ஷாட்டுக்கு சிலநொடிகள் முன்புவரை சிரித்துப் பேசிக்கொண்டிருப்பார். ஆக்ஷன் என்றதும் அவருக்குள் கதாபாத்திரத்தின் ஆன்மா நுழைந்திருப்பதைக் கண்டுகொள்ளலாம்.
படப்பிடிப்பு தொடங்கியவுடன் நடிகருக்கும் இயக்குநருக்குமான சரியான ஒத்திசைவு உருவாக மூன்று நாட்கள் கூட ஆகிவிடும். ஆனால், நயன்தாரா முதல் நாளில் இருந்தே நம் அலைவரிசையில் பக்காவாக இணைந்துவிடுவார். ‘அஷ்வின்’ என்றே என்னை அழைத்து ஒரு நண்பனாக உணரவைத்தார். இன்றும் அவர் அப்படியே.
‘மாயா’ படத்துக்கு முதலில் வேறு சில தலைப்புகள் வைத்திருந்தோம். ஆனால், படம் உருவாக உருவாக நயன்தாராவின் ஈடுபாடு மிகுந்த நடிப்பால் காட்சிகள் ஒவ்வொன்றும் வேறு ஒரு உயரத்துக்குச் சென்றுவிட்டன. நயன்தாரா என்கிற இமேஜை காட்சிகளில் நான் உணர்ந்தேன். எனவே, அதைத் தூக்கிப்பிடிப்பது போல தலைப்பு வேண்டும் என்பதை அவரது ஸ்கிரீன் பிரசென்ஸ் எனக்கு உணர்த்தியது.
எனவே, படம் முடிந்த பிறகே பரிசீலனையில் இருந்த தலைப்புகளை விட்டுவிட்டு ‘மாயா’ என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன். அந்தத் தலைப்பை அவரது நட்சத்திர அந்தஸ்து இலகுவாகச் சுமந்து படத்தின் வெற்றிக்குத் தலைப்பும் ஒரு காரணமானது. கதைசொல்ல வருபவர் யார், அவருடைய பின்னணி என்ன... யாரிடம் அசிஸ்டெண்டாக இருந்தவர் இதையெல்லாம் பார்க்கமாட்டார் நயன்தாரா. மாறாக, கதை சொல்ல வந்தவரிடம் என்ன கன்டென்ட் இருந்தது அதை அவர் எப்படி விவரித்துக் கூறுகிறார் என்பதைப் பொறுத்தே அவரிடம் பழகுவார். அதேபோல், ஒரு படத்தை நடித்து முடித்து ப்ரிவியூ பார்த்ததும் அந்தப் படத்தை அத்தோடு மறந்துவிடுவார்” என்றார்.