திரை விமர்சனம்: தி கோட்

By KU BUREAU

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் 'GOAT' படம் இன்று ரிலீஸாகி இருக்கிறது. விஜயுடன் சிநேகா, பிரஷாந்த், பிரபுதேவா, லைலா, ஜெயராம், அஜ்மல், மோகன், யோகிபாபு உள்ளிட்டப் பல பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்திருக்கிறதா என்று பார்க்கலாம் வாங்க.

SATS (Special Anti Terrorists Squad) என்ற அமைப்பின் முக்கிய உறுப்பினர்களாக இருக்கும் விஜய் (காந்தி), பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல் & ஜெயராம் டீம் ஒரு மிஷனை செய்து முடிக்கின்றனர். அதில் எதிர்பாராதவிதமாக மோகனும் அவரது குடும்பத்தினரும் பலியாகின்றனர். இதற்கிடையே சிறுவயதில் இறந்து போனதாக கருதப்பட்ட விஜயின் மகன் ஜீவன் மீண்டும் கிடைக்கிறார். மகனை மீண்டும் தன் குடும்பத்திற்கு அழைத்து செல்கிறார் விஜய். அவர் வந்த பிறகு விஜய் & கோ-க்கு ஒவ்வொரு பிரச்சினையாக வெடிக்கிறது. யாரால் பிரச்சினை, கதையின் வில்லன் யார், விஜய் இந்தப் பிரச்சினைகளை எல்லாம் எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் 'GOAT'.

அப்பா-மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் விஜய் கலக்குகிறார். படம் முழுக்க தன் இரண்டு கதாபாத்திரங்களைச் சுற்றிதான் என்பதை உணர்ந்து நடிப்பில் சிக்ஸர் அடித்திருக்கிறார். திரையரங்கில் ரசிகர்களின் ஆரவாரம் அடங்க நேரமாகிறது. விஜயின் மனைவியாக வரும் சிநேகா, நடிகர்கள் பிரபுதேவா, பிரஷாந்த், ஜெயராம், அஜ்மல் என அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்கள். மாஸ்கோ, பாங்காக், சென்னை எனப் பயணம் செய்யும் சித்தார்த்தாவின் கேமரா கண்களுக்கு குளிர்ச்சி. யுவனின் பின்னணி இசையும் விசில் போடு, சின்ன சின்ன கண்கள் பாடல்களும் பாஸ் மார்க் வாங்குகிறது.

படத்தின் ஆரம்பத்திலேயே ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக விஜயகாந்த் சர்ப்ரைஸூடன் தொடங்குகிறது படம். அதன் பின்னான ஆக்‌ஷன் காட்சிகளால் தொடக்கத்தில் இருந்தே ரசிகர்களைக் கட்டிப் போடுகிறது. விஜய்-பிரபுதேவா-பிரஷாந்த்-அஜ்மல்-ஜெய்ராம் என இவர்கள் ஐந்து பேரின் கூட்டணி செய்கிற சின்ன சின்ன சேட்டைகளும் கெமிஸ்ட்ரியும் ரசிக்க வைக்கிறது.

படத்தின் அடிநாதமே அப்பா-மகன் செண்டிமெண்ட் தான். ஆனால், விஜய் மகனைத் தொலைப்பதும், திரும்ப கிடைக்கும் போதும் என செண்டிமெட்ண்ட் காட்சிகள் வொர்க்கவுட் ஆகவே இல்லை. படத்தின் பெரிய மைனஸ் விஜயின் டீஏஜிங் தோற்றம். விஜயின் அப்பா-மகன் தோற்றம் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தை தருகிறது. தொடக்கத்தில் கார்ட்டூன் கதாபாத்திரங்களைப் பார்ப்பது போல தோன்றும் இளம் வயது விஜயின் தோற்றமும் வயதானதாக காட்டியிருக்கும் விஜயின் துறுத்திக் கொண்டு தெரியும் ஒப்பனையும் கதை நகர நகர வேறு வழியே இல்லாமல் இந்த இரண்டு தோற்றங்களுக்கும் பழக வேண்டியதாக உள்ளது. வழக்கமாக விஜய் படத்தில் தெறிக்க விடும் பாடல்கள் இந்த படத்தில் வேகத்தடையாக இருப்பதும் சறுக்கல். விறுவிறுவென வந்து போகும் ஆக்‌ஷன் காட்சிகள் சில இடங்களில் ரசிக்க வைத்தாலும் பல இடங்களில் நீண்டு கொண்டே போகிறது.

அப்பா- மகன் டிராக்கை மட்டும் மெயின் கதையாக கவனம் செலுத்திய இயக்குநர் வெங்கட்பிரபு மற்ற விஷயங்களுக்கு லாஜிக் தேவையில்லை என டீலில் விட்டு விட்டார் போல. பிரஷாந்த், பிரபுதேவா, ’மகன்’ விஜயின் கதாபாத்திர பெயர்கள், சர்ப்ரைஸ் கேமியோக்கள் குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி இவை எல்லாம் தெறி.

கிட்டத்தட்ட மூன்று மணி நேர படம் என்றாலும் எந்த இடத்திலும் பெரிதாக சலிப்பூட்டவில்லை என்பது ப்ளஸ். ‘GOAT' திரைப்படம் நிச்சயம் விஜய் ரசிகர்களுக்கு விருந்து தான்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE