HBD Roja|ஆந்திர அரசியலின் பீனிக்ஸ் பறவை நடிகை ரோஜா பிறந்தநாள் ஸ்பெஷல்!

By ச.ஆனந்த பிரியா

”வியர்வை சிந்தாமல், டச்சப் செய்து கொண்டு ஏஸி ப்ளோரில் நடித்து, கைத்தட்டல் வாங்குவதைப் போல அத்தனை எளிதானதல்ல அரசியலில் நிலைப்பது. பெரிய பெரிய ஜாம்பவான்களே தலைக்குப்புற விழுந்து மண்ணைக் கவ்விய களம்”. இந்த வார்த்தைகள் தான் ரோஜாவின் அரசியல் நுழைவுக்கான உந்துசக்தி.

பிரபல நடிகையாக வலம் வந்த ரோஜாவிடம் இந்த வார்த்தைகளைத் தான் உச்சரித்தார்கள் நெருக்கமானவர்கள். அப்போ... நான் ஏன் அரசியலில் ஜெயிக்க கூடாது என்று களமிறங்கினார் ரோஜா. நடிகை ரோஜாவின் இயல்பு அது தான்... யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார். தனக்கு சரியென்று தோன்றுவதை, உடனே அப்போதே செய்து, இயல்பாக வாழ நினைப்பவர். அந்த உந்துசக்தி அமைச்சராக உயர்ந்த போது... பொதுவெளியில் சந்திரபாபுவை எதிர்த்து சீறிய போது... ரஜினிக்கெதிராக கொந்தளித்த போது... மைதானத்தில் கபடி... கபடி.. என அத்தனை மக்கள் முன்னிலையிலும் துள்ளிய போது என இப்போது வரையிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஆந்திரா மாநிலம், திருப்பதியில் நாகராஜ ரெட்டி மற்றும் லலிதா தம்பதியருக்கு மகளாகப் பிறந்தவர் ரோஜா. இவருக்கு குமாரசுவாமி ரெட்டி மற்றும் ராம்பிரசாத் ரெட்டி என இரண்டு சகோதரர்கள் உள்ளனர். பொலிட்டிக்கல் சயின்ஸில் கல்லூரிப் படிப்பை முடித்த ரோஜா சினிமாவில் நுழைவதற்கு முன்பு குச்சுப்புடி நடனக்கலைஞராக வலம் வந்தார்.

1991-ம் ஆண்டு ‘பிரேம தப்பாஸு’ என்ற தெலுங்குப் படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவரை தமிழில் ‘செம்பருத்தி’ படம் மூலமாக அறிமுகம் செய்து வைத்தார் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி. குண்டு கண்கள், நேர்த்தியான சிரிப்பு, திறமையான நடிப்பு என முதல் படத்திலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியானார ரோஜா.

’செம்பருத்தி’ படத்திற்குப் பிறகு ‘சூரியன்’, ‘உழைப்பாளி’, ‘மக்கள் ஆட்சி’, ‘ஏழையின் சிரிப்பில்’, ‘என் ஆசை ராசாவே’ என ரஜினி, சிவாஜி, பிரபுதேவா, மம்மூட்டி என பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி நாயகி வரிசையில் வந்தார் ரோஜா. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் பல கமர்ஷியல் வெற்றிப் படங்களைக் கொடுத்தார் ரோஜா.

தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் செல்வமணியுடனேயே காதல் வயப்பட்டுத் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். அழகில் ரோஜாவை அப்படியே நகலெடுத்திருக்கும் மகளை சினிமாவுக்கு எடுத்து வரவேண்டும் என்பது செல்வமணி- ரோஜாவின் விருப்பம். ஆனால், மகளுக்கோ விஞ்ஞானி ஆக வேண்டும் என்பதுதான் கனவாம்.

சினிமாவில் நடித்து வந்தாலும் பொலிட்டிக்கல் சயின்ஸ் மாணவிக்கு அரசியல் ஆசையும் விடவில்லை. 1999-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் பிரிவான தெலுங்கு மஹிளாவில் தலைவர் பதவி கிடைத்தது. ஆனால், அங்கு அவருக்கு சரியான மரியாதை கிடைக்கவில்லை, அரசியல் பணிக்கு குறுக்கீடுகள் என்ற ஏராளமான இடையூறுகள் இருந்தது.

அங்கிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். ஆனால், அங்கும் இதே நிலை தொடர ஒருக்கட்டத்தில் அரசியலை விட்டே விலகிவிடலாம் என்று எண்ணினார் ரோஜா. அப்போதுதான் 2011-ம் ஆண்டு ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது.

அங்கு உடனே தன்னை இணைத்துக் கொண்டார் ரோஜா. அதில் இருந்து அவரின் அரசியல் கிராஃப் அதிரடியாக உயர்ந்தது. அரசியல் பயணத்தில் பாராட்டுகளைப் போலவே ரோஜா மீது பல சர்ச்சைகளும் உண்டு.

சந்திரபாபு நாயுடுவுடன் ரோஜாவுக்கு அதிக முரண் இருந்தது போலவே, ஜெகன் மோகன் ரெட்டியுடன் நல்ல நட்பும் அவருக்கு இருந்தது. கட்சியில் சேர்ந்ததில் இருந்தே அவருக்கு பல முக்கிய பதவிகளைக் கொடுத்து ஊக்குவித்தார் ஜெகன் மோகன். இப்போது ஆந்திராவின் சுற்றுலாத்துறை அமைச்சராக தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார் ரோஜா.

தனக்கு அரசியலில் பெரும் முன்மாதிரி என நடிகை ஜெயலலிதாவைக் குறிப்பிடுவார் ரோஜா. அவரது பாணியிலேயே சினிமாவை விட்டு விலகி, தற்போது அரசியலில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் ரோஜா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE