நடிகர் விஜயின் 'GOAT' படத்திற்கு இலவச டிக்கெட்!

By KU BUREAU

கும்பகோணம்: நடிகர் விஜயின் 'GOAT' திரைப்படத்திற்கு கும்பகோணத்தில் கல்லூரி மாணவிகளுக்கு முதல் காட்சிக்கான டிக்கெட்டுகளை விஜய் மக்கள் இயக்கத்தினர் இலவசமாக வழங்கினர்.

வெங்கட்பிரபு இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'GOAT' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சிறப்பு காட்சிகளுக்குத் தமிழக அரசு அனுமதி வழங்குமா எனப் பலரும் எதிர்பார்த்திருக்கின்றனர். இந்த நிலையில், தஞ்சை வடக்கு மாவட்டம் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கும்பகோணம் சேய்குளம் அருகில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், 70 ஏழ்மை நிலையில் உள்ள கல்லூரி மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நாளை காலை முதல் காட்சிக்கான டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கினர்.

இதுகுறித்து பேட்டி அளித்த கல்லூரி மாணவிகள், “விஜய் இன்னும் இரண்டு படங்கள் தான் நடிப்பதாக அறிவித்துள்ளார். இனிமேல் முதல் காட்சி பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைக்குமா எனத் தெரியவில்லை. விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவசமாக 'GOAT' படத்திற்கான முதல் காட்சி டிக்கெட் கொடுத்துள்ளனர். எங்களுக்கு மகிழ்ச்சி” எனத் தெரிவித்தனர்.

தொடர்ந்து பேசிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகி பிரபாகரன், ”இன்னும் விஜய் நூறு படங்கள் நடிக்கலாம். அதுதான் எங்களுடைய ஆசை. ஆனால், இந்த இரண்டு படங்களோடு நடிப்பதை நிறுத்துவது எங்களுக்கு வருத்தமாக உள்ளது. இருந்தாலும் இந்த இரண்டு படங்களை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக எங்களால் முடிந்ததை செய்து வருகிறோம். அதன்படி அன்னதானமும், 70 கல்லூரி மாணவிகளுக்கு இலவசமாக ’GOAT’ படத்திற்கான டிக்கெட்டுகளை வழங்கியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE