ஆந்திரா, தெலங்கானா வெள்ள நிவாரண பணிகளுக்கு பாலகிருஷ்ணா, ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட நடிகர்கள் நிதி

By KU BUREAU

ஹைதராபாத்: ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஆந்திர மாநிலம் விஜயவாடா நகரத்தில் பெய்த கனமழையால், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளை வெள்ள நீர்சூழ்ந்தது. இங்குள்ள பிரகாசம் அணையின் மதகு வெள்ளத்தில் சேதமடைந்ததால் பெருமளவு தண்ணீர் வெளியேறி குடியிருப்புகளை சூழ்ந்தது. தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

மேலும் வெள்ளத்தில் கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டன. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கு அமைக்கப்பட்டுள்ள செல்போன் டவர்கள் செயலிழந்துவிட்டன. விஜயவாடா மாவட்டத்தைச் சேர்ந்த பல லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத சூழல் ஏற்பட்டது. அங்கு இயல்புவாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

கனமழை, வெள்ளம் காரணமாக இதுவரை 35-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. பலர் காணாமல் போயுள்ளனர். மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில பேரிடர் குழுவினர், போலீஸார், தீயணைப்புப் படையினர், துணை ராணுவப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு தாராளமாக நிதியுதவி வழங்கவேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், இரு மாநில முதல்வர்கள் நிவாரண நிதிக்கு நடிகர்கள் பாலகிருஷ்ணா, ஜூனியர்என்டிஆர் தலா ரூ.50 லட்சம் வீதம் ரூ.1 கோடி நிவாரண நிதியை வழங்கியுள்ளார். அதேபோல், நடிகர் சித்து ஜொன்னலகட்டாவும் இரு தெலுங்கு மாநிலங்களுக்கும் தலா ரூ.15 லட்சம் வீதம் ரூ.30 லட்சமும், நடிகர் விஷ்வக் சென் ரூ.10 லட்சமும் நிதியுதவியை வழங்கி உள்ளனர். இதே போன்று மேலும் பல நடிகர், நடிகைகள் நிதியுதவி செய்ய முன்வந்துள்ளனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE