நடிகர் ஜெய்ஷங்கர் ஆசைக்கு தடை போட்ட ‘சோ’ - மகன் சஞ்சய் ஷங்கர் நினைவுகள்!

By KU BUREAU

சென்னை: ‘தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட்’ என மக்கள் மனதில் தனி இடம் பிடித்தவர் நடிகர் ஜெய்ஷங்கர். சிவாஜி-எம்.ஜி.ஆர். படங்கள் சினிமாவில் கோலோச்சிய சமயத்தில் திரைத்துறைக்கு வந்தவர் ஆக்‌ஷன் படங்கள், தன் படத்தின் பாடல்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தார். அவரைப் பற்றிய நினைவுகளை அவரது மகன் நடிகர்-தயாரிப்பாளர் சஞ்சய் ஷங்கர் ‘இந்து தமிழ் திசை’ யூடியூப் தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

நடிகர்- தயாரிப்பாளர் சஞ்சய் ஷங்கர் பேசியிருப்பதாவது, “ திருநெல்வேலியில்தான் அப்பா பிறந்தார். பள்ளிப்படிப்பு எல்லாம் சென்னையில்தான். சட்டக்கல்லூரியில் ஒரு வருடம் படித்தார். அங்கிருந்து நியூ காலேஜ் போய் பி.ஏ. ஹானர்ஸ் படித்தார். கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தே அப்பாவுக்கு நடிப்பின் மீது ஆர்வம் வந்தது. அந்த சமயத்தில்தான் அவர் நடிகர் சோவின் டிராமா ட்ரூப்பில் இணைந்தார். அங்கு சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தார். மைலாப்பூரில் நடந்த பல நாடகங்களில் அவர் நடித்திருக்கிறார். அங்கிருந்துதான் அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதில் என்ன வேடிக்கை என்றால், நடிகர் சோ அப்பாவிடம் ‘சினிமாவில் நடிக்க போகாதே! உன் கண்கள் சின்னதாக இருக்கிறது. படங்களுக்கு செட் ஆக மாட்டே!’ என்று அவரின் சினிமா ஆசைக்கு தடை போட்டார்.

’இரவும் பகலும்’ படத்திற்கான ஆடிஷன் நாள் அது. அன்று காலை அப்பாவுக்கு மத்திய அரசு வேலை கிடைத்து கிளம்ப வேண்டும். மாலை படத்திற்கான ஆடிஷன் இருக்கிறது. நடிப்பு ஆசையால் வேலையை விட்டு விட்டு அவர் ஆடிஷனுக்குப் போய் தேர்வானார். அவருடைய முதல் படமான ‘இரவும் பகலும்’ ரொம்பவே ஸ்பெஷல். முதல் படத்திலேயே டூயல் ரோல்! இந்தப் படம் வெளியான சமயத்திலேயே அப்போதைய ஜாம்பவான்களான சிவாஜி- எம்.ஜி.ஆர். படங்களும் ரிலீஸ் ஆகியிருந்தது.

தொடர்ந்து ஐந்தாறு கதைகள் நடித்து விட்டு, அடுத்து ஆக்‌ஷன் ஹீரோவாக அவதராம் எடுத்தார். சேலம், மாடர்ன் தியேட்டர்ஸ் அப்பாவின் ‘சி.ஐ.டி. ஷங்கர்’ படம் தயாரித்தது. அது ஹிட்! தொடர்ந்து மாடர்ன் தியேட்டர்ஸூடன் ஒன்பது படங்கள் ’பாண்ட்’ படங்கள் நடித்தார். கோட், சூட், கேமரா என ஃபாரின் ஸ்டைலை ‘பாண்ட்’ படங்களில் அப்பா கடைபிடித்தார். இதனால், அவருக்கு ‘தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட்’ என்ற பட்டம் கிடைத்தது. எம்.ஜி.ஆர். சார் அப்பாவுடன் நல்ல நட்பிலேயே இருந்தார். அவருடன் ஒரு படம் அப்பா நடிக்க வேண்டியதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அது நடக்கவில்லை. சிவாஜி சார் மீது அப்பாவுக்கு எப்போதுமே மரியாதை உண்டு. நடிகர்கள் சோ, அசோகன், வெண்ணிலாடை மூர்த்தி ஆகியோர் அப்பாவுடன் நல்ல நட்பு இருந்தது” என்றார்.

மேலும் அவர் பேசியதாவது, “ஆக்‌ஷன் படங்களுக்குப் பிறகு மீண்டும் அப்பா ஜானர் மாற்றினார். ‘வீட்டுக்கு வீடு’ படத்தில் இருந்து காமெடி, குடும்ப பாங்கான கதைகள் நடித்தார். எண்பதுகளின் தொடக்கத்தில் இதுநாள் வரை ஹீரோவாக நடித்தது போதும் என ஆறு மாதங்கள் சினிமாவுக்கு பிரேக் கொடுத்தார். அப்போதுதான் அவருக்கு ‘முரட்டுக்காளை’ பட வாய்ப்பு வந்தது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE