ஹைதராபாத்: ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு அந்த மாநிலத்தையே புரட்டி போட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். ரூ. 1 கோடி நிதியுதவி செய்திருக்கிறார்.
கேரள மாநிலம் வயநாட்டைப் புரட்டிப் போட்டது நிலச்சரிவும் வெள்ளமும். இந்த கோர சம்பவத்தில் இருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில், அடுத்த அதிர்ச்சியாக ஆந்திரா மற்றும் தெலங்கானாவை பாதித்திருக்கிறது கடும் வெள்ளப்பெருக்கு. குண்டூர், கிருஷ்ணா ஆகிய பகுதிகளில் பெய்த மழையால் குடியிருப்பு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்டோர் இந்த வெள்ளத்தால் உயிரிழந்திருக்கிறார்கள். விமானப் போக்குவரத்து, ரயில் சேவையும் நிறுத்தப்பட்டிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர்.
ஆயிரக்கணக்கில் கால்நடைகளும் உயிரிழந்திருக்கிறது. வெள்ளம் பாதிக்கப்பட்டப் பகுதிகளை ஆய்வு செய்த முதல்வர் சந்திரபாபு நாயுடு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பிரதமர் மோடியும் ஆந்திராவுக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக உறுதி கொடுத்திருக்கிறார். இப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். ரூ. 1 கோடி நிதி கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.