‘பாலியல் குற்றச்சாட்டுகளை சட்டரீதியாக சந்திப்பேன்’ - நடிகர் ஜெயசூர்யா தகவல்

By KU BUREAU

மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் குறித்து விசாரித்த, ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை, கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த அறிக்கை வெளியான பின் சில நடிகைகள், பாலியல் தொல்லை கொடுத்த நடிகர்கள் மீது புகார்களைக் கூறி வருகின்றனர்.

மலையாள நடிகர் சங்க பொதுச் செயலாளராக இருந்த சித்திக் மீது, துணை நடிகை பாலியல் புகார் கூறியிருந்தார். நடிகரும் கொல்லம் எம்.எல்.ஏ.வுமான முகேஷ், மணியன் பிள்ளை ராஜு, இடைவேளை பாபு, ஜெயசூர்யா உள்ளிட்ட 6 பேர் மீது நடிகை மினு முனீர் பாலியல் புகார் அளித்திருந்தார். பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. நடிகர் ஜெயசூர்யா மீது மேலும் ஒரு நடிகை புகார் கொடுத்துள்ளார். இதற்கிடையே, அமெரிக்காவில் இருக்கும் நடிகர் ஜெயசூர்யா, இந்தப் பாலியல் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

தனது பிறந்த தினத்தை முன்னிட்டு அவர், வெளியிட்டுள்ள அறிக்கையில், “தனிப்பட்ட காரணங்களுக்காக நான் என் குடும்பத்தினருடன் அமெரிக்காவில் இருக்கிறேன். இதற்கிடையே இரண்டு பாலியல் குற்றச்சாட்டுகள், என் மீது பொய்யாகச் சுமத்தப்பட்டுள்ளன. இது என்னையும் என் குடும்பத்தினரையும் பாதித்துள்ளது. இதைச் சட்ட ரீதியாக எதிர்கொள்ள முடிவு செய்துள்ளேன்.

மனசாட்சி இல்லாதவர்கள், பொய்க் குற்றச்சாட்டு களைச் சுமத்துவது எளிது. பொய் எப்போதும் உண்மையை விட வேகமாகப் பரவும். ஆனால் உண்மை வெற்றி பெறும். விரைவில் கேரளா திரும்பி சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வேன். இந்தப் பிறந்தநாளை வேதனையான நாளாக மாற்றியவர்களுக்கு நன்றி. பாவம் செய்யாதவர்கள் முதலில் கல்லெறியட்டும். பாவம் செய்தவர்கள் மீது மட்டுமே” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE