ஹேமா கமிட்டி பற்றிய கேள்வி: பேசாமல் நழுவிய சுஹாசினி!

By KU BUREAU

சென்னை: ஹேமா கமிட்டி பற்றிய கேள்விக்கு நடிகை சுஹாசினி பதில் சொல்லாமல் தவிர்த்திருக்கிறார்.

இந்திய திரையுலகையே ஹேமா கமிட்டி அறிக்கை பரபரக்க செய்திருக்கிறது. கேரளத் திரையுலகில் பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றும் பல முன்னணி நடிகர்கள் நடிகைகளிடம் பாலியல் அத்துமீறல்கள் செய்திருக்கிறார்கள் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று சென்னை பெசன்ட் நகர் கடற்கரை சாலையில் ரோட்டரி ராஜன் ஐ பேங்க் சார்பில் கண் தானம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் நடிகை சுஹாசினி மணிரத்னம் கண் தானம் செய்ததற்கான கையொப்பம் இட்டு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகை சுஹாசினி மணிரத்னம் அனைவரும் கண்தானம் செய்ய வேண்டும் எனவும் தனது குடும்பத்தில் உள்ள அனைவரும் கண்தானம் செய்துள்ளோம் என தெரிவித்தார். "நான் தற்பொழுதே ஆறு மாதத்திற்கு ஒருமுறை ரத்த தானம் செய்து வருகிறேன். தலசீமியா நோயாளிகளுக்காக குறிப்பாக குழந்தைகளுக்காக ரத்தம் தானம் கொடுக்க முதல் ஆளாக நான் நிற்பேன். மறைந்ததற்கு பிறகு எல்லா உறுப்புகளையும் தானமாக கொடுக்கலாம். குறிப்பா கண் தானம் செய்ய வேண்டும். மனமுவந்து கண் தானம் செய்ய முன்வர வேண்டும்" என்றார்.

மலையாள சினிமாவில் நடைபெறும் சர்ச்சை குறித்தும் ஹேமா கமிட்டி குறித்தான அறிக்கை தொடர்பாகவும் மூத்த நடிகையாக உங்கள் கருத்து என்ன என்பது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், இந்த கேள்விக்கு பேச மறுத்து நடிகை சுஹாசினி மணிரத்னம் பின் வாங்கினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE