சென்னை: நடிகை ஸ்ருதிஹாசன் சிலம்பம் சுற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். நடிகர் ரஜினிகாந்துடன் அவர் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறை. லோகேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் நடிகர்கள் நாகர்ஜூனா, உபேந்திரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதில் ஸ்ருதிஹாசன் ‘ப்ரீத்தி’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது அவரும் படப்பிடிப்பில் பங்கேற்கிறார். உடற்பயிற்சி செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர் ஸ்ருதி. குறிப்பாக, உடல் நலனைப் பேணுவதற்காக உடற்பயிற்சி தொடங்கியதாகவும் முன்பு ஒருமுறை சொல்லியிருந்தார்.
ஒருபக்கம், ‘கூலி’ படப்பிடிப்பில் இவர் பிஸியாக இருந்தாலும் தற்காப்பு கலை மற்றும் ஒருங்கிணைந்த தற்காப்பு கலைக்கான (மிக்ஸ்ட் மார்சியல் ஆர்ட்ஸ்) பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதுதொடர்பான வீடியோவை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருப்பவர், ‘தேவர்மகன்’ படத்தில் தனது தந்தை கற்றுத் தேர்ந்த அதே கலையை தானும் கற்பதாகக் கூறியிருக்கிறார்.