இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், ஏன் ஸ்டண்ட் மாஸ்டர்கள் கூட திரைப்பட இயக்குநராகவும் நடிகர்களாகவும் ஆகமுடியும். ஆகியும் இருக்கிறார்கள். ஆனால், ஒரு நடிகை கதாசிரியராக முடியுமா? முடியும் என நிரூபித்திருக்கிறார் மேகா ஷெட்டி.
இத்தனை அழகான ஒரு பெண் நடிப்பை விட்டுவிட்டுக் கதை எழுத வருவானேன் என்று விசாரித்தால் மேகா ஷெட்டியின் குடும்பப் பின்னணி வியக்க வைக்கிறது. தாத்தா காலத்திலிருந்தே கதை எழுதி காசுபார்ப்பதை ஒரு தொழிலாகவே செய்துவருகிறது மேகாவின் குடும்பம்.
இதை பெருமையான விஷயமாக கதைக்கும் மேகா ஷெட்டி, “எனக்கு நடிப்பு எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் ஒரு கதாசிரியராகப் புகழ்பெற வேண்டும் என்பது. எனது தாத்தா, அப்பா, அண்ணன் என எல்லோருமே கன்னட சினிமாவில் புகழ்பெற்ற கதாசிரியர்கள். அவர்கள் என்னை நடிக்க அனுமதித்தாலும் அவர்கள் புழங்கும் துறையிலும் ஒரு கை பார்க்க வேண்டும் என்றுதான் திரைக்கதை எழுதத் தொடங்கினேன்.
விரைவில் நான் எழுதிய கதை படமாக இருக்கிறது. நானே தயாரிக்கவிருக்கும் ஒரு படத்துக்கும் இப்போது திரைக்கதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.
நான் கதை, திரைக்கதை எழுதும் படங்களில் நடிக்க மாட்டேன். நடிப்பும் எழுத்தும் திரையுலகில் பிரிக்க முடியாத கலைகள் என்றாலும் ஒரே படத்தில் இவை இரண்டையும் நான் செய்ய மாட்டேன்” என்கிறார்.