‘ஜோக்கர் இப்போ ஹீரோவானேன்...’ நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷல்!

By காமதேனு

உழைப்பும் நம்பிக்கையும் இருந்தால் வெற்றி நிச்சயம் கைகூடும் என்பதற்கு உதாரணம் நடிகர் சிவகார்த்திகேயன். மீடியாவுக்குள் நுழைந்த ஆரம்ப காலத்தில், இன்று தான் இருக்கும் இடத்தை சினிமாவில் அடைவோம் என சிவகார்த்திகேயனே எதிர்பார்த்திருப்பாரா என்பது சந்தேகம் தான். அந்த அளவிற்கு இளைஞர்களும் குழந்தைகளும் இவரது ரசிகர்களாக உள்ளனர். இன்று நடிகர் சிவகார்த்திகேயன் தனது 38ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.

நடிகர் சிவகார்த்திகேயன்

மீடியா உலகமும் அதில் வெற்றிப் பெறுவதும், வெற்றியை தக்க வைத்துக் கொள்வதும் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. சிவகார்த்திகேயனுக்கும் இந்த மாயாஜால உலகம் ஆரம்பத்தில் வசப்படவில்லை. ’ஆங்கரிங்கா? நீயா? செட்டாக மாட்ட... போப்பா’ என்று தான் துரத்தியது. ஆனால், சின்னத்திரையில் தொகுப்பாளராக அவர் விட்டுச் சென்ற இடத்தை இப்போது வரையும் நிரப்ப யாருமில்லை. தொகுப்பாளராக சிவகார்த்திகேயனின் கலகல பேச்சும், சேட்டையும் நிறைந்த பழைய வீடியோக்களை இப்போதும் யூடியூப் தளத்தில் ரிப்பீட் மோடில் பார்க்கும் பார்வையாளர்கள் ஏராளம்.

கல்லூரி காலத்தில் ஜாலியாக மிமிக்ரி செய்து வந்த சிவகார்த்திகேயன் அதற்கான மேடை தேடி சின்னத்திரைக்கு வந்தபோது ஆரம்பகாலத்தில் நிராகரிப்பு, அவமானங்களே கிடைத்தது. காலம் மாற காட்சிகளும் மாறியது. நிராகரித்த அதே சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சி போட்டியாளர், பின்பு தொகுப்பாளர் என அடுத்தடுத்து வாய்ப்புகள் வரிசை கட்டத் தொடங்கியது.

சின்னத்திரையிலும் சினிமாவிலும் ஆரம்பத்தில், தான் போராடிய காலத்தில் தனக்கு பெரும் ஆதரவாக இருந்தது தன் குடும்பம் தான் என்பார் சிவா. அப்பா தாஸ் காவல் துறை அதிகாரி. அவர் மீது அளவுக்கடந்த பாசம் உண்டு. அப்பா மறைவுக்கு பிறகு அம்மா, அக்கா தான் தனக்கு எல்லாம் என்பார். மனைவி ஆர்த்தி கொடுக்கும் ஆதரவால் தான் இவ்வளவு தூரம் ஓட முடிகிறது என்பார் நெகிழ்ச்சியாக.

குடும்பத்தினருடன் நடிகர் சிவகார்த்திகேயன்

சின்னத்திரையில் வளர்ந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில் அங்கிருந்து பெரிய திரைக்கும் வாய்ப்புகள் இவரை நோக்கி வந்தது. ஆனால், ‘ஏகன்’ படத்தில் இவர் நடித்த பல காட்சிகள் கட்டானது. ’வேட்டை மன்னன்’ படமும் வெளியாகாமல் போக, பாண்டிராஜ் மூலமாக வந்தது ‘மெரினா’ பட ஹீரோ வாய்ப்பு. என்னை ஹீரோவாக வைத்து படமா என முதலில் தயங்கினார் சிவகார்த்திகேயன். அந்தத் தயக்கத்தைப் போக்கி அவருக்கு தைரியம் கொடுத்து நடிக்க வைத்தார் பாண்டிராஜ். 'மனம் கொத்தி பறவை’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ என சினிமாவில் தொடர்ந்து ‘எதிர்நீச்சல்’ போட்டவருக்கு சினிமா மெல்ல தன் வசமானது.

’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘மான் கராத்தே’, ‘ரஜினி முருகன்’ எனத் தொடர்ந்து கமர்ஷியல் படங்களின் கதாநாயகனாக தன்னை நிலை நிறுத்தினார் சிவா. சின்னத்திரை முகங்களுக்கு சினிமாவில் வெற்றி கிடைக்காது என்ற கட்டுக்கதைகளை உடைத்தார். நடனம், மிமிக்ரி, நடிப்பு என ’சீமராஜா’வாக வலம் வந்தவர் சர்ச்சைகளையும் சந்தித்தார்.

ஒரே மாதிரியான கமர்ஷியல் படங்கள், அடுத்தடுத்து படங்கள் சரியாக போகாதது, தயாரிப்பாளர்களுடன் பணப்பிரச்சினை என ஒருக்கட்டத்தில் சிவகார்த்திகேயனுக்கு சினிமா சோதனைகளையும் கொடுத்தது. ’ ஒரு மேட்ச்ல தோத்தா, அந்த மேட்ச்தான் முடியுமே தவிர, வாழ்க்கை முடியாது. தொடர்ந்து இன்னும் ஓடிக்கிட்டே தான் இருப்பேன். இனி நான் பண்ற படங்கள் எல்லாம் என் தயாரிப்பாளர்களுக்கு லாபகரமான படங்களா தான் நிச்சயமா இருக்கும். ரசிகர்களையும் ஏமாற்றாது” என்றார். தனது வழக்கமான கமர்ஷியல் பாதையில் இருந்து சற்றே விலகி ’கனா’, ‘டான்’, ‘டாக்டர்’, ‘மாவீரன்’, ‘அயலான்’ போன்றப் படங்களில் நடித்தார்.

அதில் ‘டாக்டர்’, ‘டான்’ நூறு கோடி ரூபாய் வசூல் செய்து ஹிட்டடித்தது. தற்போது ‘அமரன்’, ’எஸ்கே23’ என பிஸியாக இருக்கிறார் சிவகார்த்திகேயன். நடிப்பு மட்டுமல்லாது பொறுப்பான தயாரிப்பாளர், ஜாலியான பாடகர், டிரெண்டிங் பாடலாசிரியர் என பன்முகம் கொண்டு, கதைத் தேர்வில் இன்னும் கூடுதல் கவனத்தையும் உழைப்பையும் கொடுத்து ரசிகர்களைத் திருப்தி படுத்த வேண்டும் என்பதுதான் என் இலக்கு எனச் சொல்லும் சிவகார்த்திகேயனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE