விக்கிரவாண்டியில் செப்.23ம் தேதி விஜய் கட்சியின் முதல் மாநாடு: அனுமதி கேட்டு மனு

By KU BUREAU

நடிகர் விஜயின் தவெக கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனத் தனது கட்சியின் பெயரை அறிவித்து அரசியல் வருகையை உறுதி செய்தார். இனி வரும் காலத்தில் அரசியலில் மட்டுமே கவனம் செலுத்தப் போவதாக உறுதியளித்த விஜய் சினிமாவை விட்டு விலகுவதையும் அறிவித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தவெக-வின் கட்சி கொடியையும் அறிமுகப்படுத்தினார். இந்த கொடியில் இடம் பெற்றிருக்கும் யானைகள், மலர், கொடியின் வண்ணம், நட்சத்திரங்களுக்குப் பின்னால் சுவாரஸ்ய வரலாறு இருப்பதாகவும் அதை மாநாட்ட்டு நிகழ்வில் தெரிவிப்பதாகவும் கூறினார்.

ஆனால், அந்தக் கொடி தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. கொடியில் இடம் பெற்றிருக்கும் யானைகள் பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னம் எனவும் அதை விஜய் பயன்படுத்துவது தேர்தல் ஆணைய விதிமுறைகளபடி தவறு எனவும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆனந்தன் புகார் மனு கொடுத்திருக்கிறார். இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் விஜய் தனது முதல் மாநாட்டில் பதில் கொடுப்பார் என எதிர்பார்க்கலாம்.

தவெகவின் முதல் மாநாட்டிற்கு பல இடங்கள் பரிசீலனையில் இருந்தது. இப்போது விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இறுதி செய்யப்பட்டிருக்கிறது. விக்கிரவாண்டியில் 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் அடுத்த மாதம் 23ஆம் தேதி நடக்கும் தமிழக வெற்றிக்கழக முதல் மாநாட்டிற்கு அனுமதியளித்து, பாதுகாப்பு அளிக்குமாறு விழுப்புரம் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் திருமால் அவர்களிடம் தமிழக வெற்றிக்கழக நிர்வாகி புஸ்லி ஆனந்த் இன்று மனு கொடுத்திருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE