சென்னை: கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான ’கொட்டுக்காளி’ திரைப்படம் பல விவாதங்களை கிளப்பி இருக்கிறது. இந்தப் பட அனுபவம் குறித்து இயக்குநர் வினோத்ராஜ் ‘இந்து தமிழ் திசை’ யூடியூப் தளத்தில் பேட்டி கொடுத்திருக்கிறார்.
’கொட்டுக்காளி’ குறித்து அவர் பகிர்ந்திருப்பதாவது, “என்னுடைய முதல் படமான ‘கூழாங்கல்’ பார்த்துவிட்டு மெயின் ஸ்ட்ரீம் பார்வையாளர்களில் 20% பேர் எனக்குக் கிடைத்தார்கள். அதையடுத்து ‘கொட்டுக்காளி’ படத்தில் 40% என அதிகமாகி இருக்கிறது. 'கொட்டுக்காளி’ படம் பார்த்துவிட்டு இயக்குநர்கள் இரஞ்சித், கார்த்திக் சுப்பாராஜ் போன்ற இயக்குநர்கள் ‘இதுபோன்ற படத்தை மல்டிபிளக்ஸ் திரையரங்கில் வெகுஜன மக்களோடு பார்ப்பதும் இந்த இடத்திற்கு இந்தப் படம் வந்துள்ளதும் பெரிய அரசியல்’ என்று பாராட்டினர்.
‘கூழாங்கல்’ படத்தைப் பார்த்துவிட்டு சூரி அண்ணன் அப்போதே என்னிடம் பேசியிருந்தார். அவரிடம் ‘கொட்டுக்காளி’ படத்தையும் பாண்டி பற்றியும் பேசியபோது அவருக்கு உடனே பிடித்து விட்டது. பாண்டி கதாபாத்திரத்தை அவர் உடனே புரிந்து கொண்டார்.
நடிகர் சிவகார்த்திகேயன் போன்ற தயாரிப்பாளர் என்னிடம் ‘நீ பிடிச்சதை செய்’ என்று சொன்னபோது நான் விரும்பியதை முடிந்தளவு படத்தில் கொண்டு வர வேண்டும் என்று நினைத்துதான் ‘கொட்டுக்காளி’ செய்தேன். ‘கதைகள் இருந்தா சொல்லுடா’ என சிவகார்த்திகேயன் என்னிடம் முன்னாடியே கேட்டிருக்கிறார். நடிகராக அவருடைய இடமும் பொறுப்பும் எனக்குத் தெரியும். கதாபாத்திரத்தோடு அவருடைய பொறுப்பையும் சரி செய்யும் கதை வந்தால் நிச்சயம் அவரை இயக்குவேன். அது சீக்கிரம் நடக்கும் என நம்புகிறேன்” என்று பேசியுள்ளார்.
» இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் நடிக்கும் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன்!
» நடிகர் மோகன்லால் உட்பட மலையாள நடிகர் சங்கத்தின் 16 உறுப்பினர்களும் திடீர் ராஜினாமா!