கங்கனா எரிச்சலூட்டும் வகையில் பேசுவதை நிறுத்த வேண்டும்: பாஜகவில் இருந்தும் வலுக்கிறது எதிர்ப்பு!

By KU BUREAU

விவசாயிகள் போராட்டம் குறித்து நடிகையும், பாஜக எம்.பி.,யுமான கங்கனா தெரிவித்திருக்கும் கருத்துகள் சர்ச்சையை கிளப்பியிருக்கின்றன. இது பாஜகவின் கருத்து கிடையாது என்று அவசர அவசரமாக அறிக்கை வெளியிடும் அளவுக்கு சர்ச்சையையும், அதிருப்தியையும் உருவாக்கியது கங்கனாவின் பேச்சு.

ஹரியான மாநிலத்தில் சட்டசபை தேர்தல் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது. இதற்காக மாநில கட்சிகள் தீவிர பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சமயத்தில் நடிகையும், மண்டி தொகுதி எம்.பி.,யுமான கங்கனா விவசாயிகள் குறித்து தெரிவித்திருக்கும் கருத்து பலரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்திருந்த நடிகை கங்கனா அதில், “மத்திய அரசின் புதிய வேளாண்மைச் சட்டத்துக்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல காரணங்களுக்காக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். போராட்டம் என்ற பெயரில் நடந்த குற்றங்களை இந்த தேசம் அறியாது. விவசாயிகளின் போராட்டத்தின் போது பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்களும் நடந்தது. பல பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்குப் பின்னர் தூக்கில் தொங்கவிடப்பட்டனர்” என்று சகட்டு மேனிக்கு பேசியிருந்தார் கங்கனா.

அந்த சமயத்தில் மோடி அரசின் வலுவான நடவடிக்கை இல்லை என்றால் இந்தியாவும் வங்கதேசத்தை போல ஆகியிருக்கும். சட்டங்கள் திரும்பப் பெறப்பிட்ட பின்பும் போராட்டம் தொடர்ந்ததற்கு காரணம் வெளிநாட்டு சதிகள் தான்” என்று கூறியிருந்தார்.

கங்கனாவின் இந்தப் பேச்சுக்கு பலரும் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்தனர். குறிப்பாக, பஞ்சாப் பா.ஜ.க மூத்த தலைவர் ஹர்ஜித் கரேவால் கங்கனா இதுபோன்று எரிச்சலூட்டும் வகையில் அறிக்கைகளை வெளியிடுவதையும் பேசுவதையும் நிறுத்த வேண்டும் எனக் கூறியிருந்தார்.

”பிரதமர் மோடி விவசாயிகளுக்கு நல்லது செய்யும்படியான பல்வேறு விஷயங்களை முன்னெடுத்துள்ளார். ஆனால், எதிர்க்கட்சிகள் எங்களுக்கு எதிராகச் செயல்படுகிறது. கங்கனாவின் அறிக்கையும் அப்படித்தான் இருக்கிறது. விவசாயிகள் பற்றி பேசுவது அவர் துறை கிடையாது” எனக் கூறியிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE