மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அதிகாரி ஒருவர் தன்னிடம் அவமரியாதையாக நடந்து கொண்டதாக நடிகை நமீதா முன்வைத்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சேகர் பாபு விளக்கம் கொடுத்திருக்கிறார்.
நடிகை நமீதா நேற்று தனது கணவருடன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்யச் சென்றிருக்கிறார். அப்போது அங்கிருந்த கோயில் அதிகாரி முத்துராமன் என்பவர் தன்னிடம் இந்துமத சான்றிதழ் கேட்டதாகவும் அவமரியாதை செய்ததாகவும் நமீதா சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு குற்றம் சாட்டியிருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த வீடியோவில் வேண்டுகோள் விடுத்திருந்தார் நமீதா.
இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு நமீதாவின் புகார் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், “நடிகை நமீதா எந்த மதத்தைச் சார்ந்தவர் என்ற விசாரிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை செய்ய உத்தரவிட்டிருக்கிறோம். நமீதா மனம் வருந்தும்படி அங்கு சம்பவம் நடந்திருந்தால் அதற்கு எங்கள் வருத்தத்தை பதிவு செய்கிறோம்” என்றார்.