வறுமையில் வாடிய பள்ளி மாணவன்; உதவிக்கரம் நீட்டிய நடிகர் விஜய்!

By KU BUREAU

தூத்துக்குடி: குடும்ப வறுமை காரணமாக படித்துக்கொண்டே வாழைக்காய் கடையில் வேலை பார்க்கும் கோவில்பட்டியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவருக்கு நடிகர், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முத்து நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவர் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி மஞ்சுளா. இவருடைய மகன் ரமேஷ். இவர் கோவில்பட்டியில் அரசு உதவி பெறும் ஏவி மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த வாரம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நீயா- நானா’ நிகழ்ச்சியில் ரமேஷ் கலந்து கொண்டார். அதில் தன்னுடைய குடும்ப வறுமை, தனது தாய் உடல்நிலை பாதிப்பு காரணமாக பள்ளி முடிந்து மாலை நேரத்தில் வாழைக்காய் கடையில் பணிபுரிந்து வருவது குறித்து பேசியுள்ளார்.

இந்த காணொலியைப் பார்த்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மூலமாக மாணவருக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அந்த மாணவனை தொடர்பு கொண்டு பேசியது மட்டுமின்றி ரூ. 25 ஆயிரம் நிதி உதவி செய்துள்ளார்.

மேலும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளை அந்த மாணவர் வீட்டிற்கு அனுப்பி அந்த குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான பல சரக்கு பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்டவைகளை வழங்கியுள்ளனர். அது மட்டுமல்லாது மாணவரின் உயர்கல்வி பயில தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE