விஜய்சேதுபதி தயாளன்.. விக்ரம் எனது குரு! - அனுகிரீத்தி வாஸ் பேட்டி

By ஆர்.சி.ஜெயந்தன்

அறிமுகப் படத்திலேயே மாஸ் ஹீரோ ஜோடியாக நடிக்க முடியும் என்று மீண்டும் அதிரடி காட்டியிருக்கிறார் அனுகிரீத்தி வாஸ். ரவிதேஜா நடிப்பில் சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி ஹிட்டடித்த படம் ‘டைகர் நாகேஷ்வர ராவ்’. அப்படத்தில், உலகமகா திருடன் டைகர் நாகேஷ்வர ராவை பார்க்காமலேயே, அவர் மீது அபிமானத்தை வளர்த்துக் கொண்டு, கிளைமாக்ஸில் அவரைக் கட்டிப்போட்டு போலீஸிடம் ஒப்படைக்கும் ஜெயராணி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் அனுகிரீத்தி வாஸ்.

தெலுங்கில் இதுதான் அவருக்கு அறிமுகப்படம். கடந்த ஆண்டு பொன்ராம் இயக்கத்தில், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான ‘டிஎஸ்பி’ படத்தில் அவருக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானார். திருச்சியில் பிறந்து, வளர்ந்து, சென்னை லயோலா கல்லூரியில் படித்த இந்தத் தமிழ்ப் பெண், 2018-ம் ஆண்டு ‘மிஸ் இண்டியா’ போட்டியில் டைட்டில் வின்னர். காமதேனு டிஜிட்டலுக்காக அவருடன் பிரத்யேகமாக உரையாடியதிலிருந்து…

அனுகிரீத்தி வாஸ்

தமிழ்நாட்டுப் பெண்களுக்கு ‘மிஸ் இண்டியா’ டைட்டிலை ஜெயிப்பதெல்லாம் பெரிய கனவு என்று கதை கட்டிவிடுபவர்கள் அதிகம். திருச்சியில் பிறந்து வளர்ந்த நீங்கள் இந்த டைட்டிலை எப்படித் தட்டிக்கொண்டு வந்தீர்கள்?

சவால்கள் அதிகம் தான். திருச்சியிலிருந்து ‘மிஸ் இண்டியா’ போட்டியில் கலந்துகொண்ட ஒரே தமிழ்ப் பெண் நானாகத்தானிருப்பேன். தென்னிந்தியாவிலிருந்து செல்லும் பெண்கள் பெரும்பாலும் இறுதிப் போட்டியில் பின் தங்கிவிடுவார்கள். மிஸ் இந்தியா போட்டியில் கலந்துகொள்ள எப்படி நம்மைத் தயாரிப்பது என்பது பற்றிய பயிற்சியோ, வழிகாட்டல்களோ சென்னையிலேயே இல்லாதபோது, திருச்சியில் எப்படிக் கிடைக்கும்?

ஆனால், மும்பை,டெல்லியில் இதற்கென்றே பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள். பயிற்சிப் பட்டறைகள் நடக்கின்றன. அங்கெல்லாம் பயிற்சி கொடுப்பவர்கள், பெரும்பாலும் அங்குள்ள பெண்கள் மீதுதான் அதிக கவனம் செலுத்துவார்கள். தவிர நமது மாநிலத்தைச் சேர்ந்த பெண் என்கிற பிராந்திய உணர்வுடன், தேவையான நவீன ஆடைகள், அழகுப் பொருட்கள், பயிற்சி என எல்லாமே ஸ்பான்சர் செய்கிறார்கள்.

அனுகிரீத்தி வாஸ்

நமக்கு இங்கே அப்படியொரு கான்செப்டே கிடையாது. நான் ‘மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் கலந்துகொள்ள முழுமையாக என்னைத் தகுதியாக்கிக்கொண்டிருக்கிறேன். எனக்கு ஸ்பான்சர் செய்யுங்கள்’ என்று இங்கே கொலாபரேட் செய்யலாம் என்று கேட்டால் சிரிப்பார்கள்.

அவர்கள் அப்படிச் சிரிப்பதிலும் தவறில்லை என்று நினைக்கிறேன். இன்றைய தலைமுறை எவ்வளவு நவீனமாக இருந்தாலும் நவீன ஆடைகளை அணிந்தாலும் நமது கலாசாரத்தின் மீது அவர்களுக்குப் பிடிமானம் அதிகமாக இருக்கிறது. அதனால்தான், இங்கே நடக்கும் மாநில அளவிலான அழகிப் போட்டிகள்கூட அவ்வளவாகப் பிரபலமாகாமல் இருக்கிறது.

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான், சென்னை லயோலா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது, நண்பர்கள், வெல்விஷர்ஸ் மூலம் நான் என்னைத் தயாரித்துக் கொண்டு களமிறங்கினேன். யூடியூபில் பார்த்து ‘ரேம்ப் வாக்’ செய்வதற்கெல்லாம் நானே சுயமாக சென்னை கல்லூரி ஹாஸ்டல் வரண்டாவில் பயிற்சி எடுத்துக்கொள்வேன்.

பயிற்சி என்றால் ஒரு நாள் கூடத் தவறமாட்டேன். கிண்டல் செய்பவர்களைப் பற்றி நான் கவலையும் பட்டதில்லை. அப்படி என்னைத் தயாரித்துக் கொண்டதற்கு உரிய வெற்றி கிடைத்து. எனது வெற்றி என்னுடையது மட்டுமல்ல; அது தமிழ்நாட்டுக்கானதும்தான். போட்டியில் கலந்துகொள்ள ஒன்வே டிக்கெட்டில் போனேன். காரணம், எனது தோழிகள், நண்பர்கள் அங்கே கைகொடுப்பார்கள் என்கிற நம்பிக்கையில்தான்.

அனுகிரீத்தி வாஸ்

அந்த நம்பிக்கையைக் காப்பாற்றினார்கள். அதனால் எனது மிஸ் இண்டியா வெற்றியை அவர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன். இந்த வெற்றி என்னுடன் முடிந்துவிடக் கூடாது, மிஸ் இந்தியாவில் வென்றால்தான் உலகப் போட்டியில் தமிழ்நாட்டுப் பெண்கள் கலந்துகொள்ள முடியும். எனவே, சென்னையிலேயே இப்போட்டிகளுக்கான பயிற்சிக் களங்களை உருவாக்க வேண்டும். மாடலிங் துறையில் இறங்க நினைப்பவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். அதற்கு உதவி செய்ய நான் எப்போதும் தயாராகவே இருக்கிறேன்.

மிஸ் இண்டியா பட்டம் வென்றபிறகு என்ன நடந்தது?

இந்தியா சார்பில் என்னை மிஸ் வேல்ர்ட் போட்டிக்கு அனுப்பினார்கள். 2019-ல் சீனாவில் நடந்தது. இறுதிப் பட்டியலில் இடம்பிடித்த 30 பேரில் ஒருத்தியாக வந்தேன். மிஸ் இண்டியா போட்டியில் வென்றால், அதை நடத்தும் ஃபெமினா குழுமத்துடன் உள்ள ஒப்பந்தத்துக்காகப் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன். பல விளம்பர வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டேன். ஆனால், எனது எண்ணமெல்லாம் சினிமாவை நோக்கியே இருந்தது. எப்படியாவது தாய்மொழியான தமிழில் அறிமுகமாகிவிட வேண்டும், அது சின்னப் படமாக இருந்தாலும் நல்ல படமாக இருக்க வேண்டும் என்று ஆடிசன்களை கவனிக்கத் தொடங்கினேன். அப்படித்தான் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அறிமுகமாகும் அதிர்ஷ்டம் அடித்தது.

மாடர்ன் பெண்ணான உங்களுக்கு அறிமுகப் படத்திலேயே சேலை கட்டி, அடக்கம் ஒடுக்கமாக நடித்திருந்த அன்னபூரணி கதாபாத்திரம் அமைந்தது முரணாகத் தோன்றியதா?

அனுகிரீத்தி வாஸ்

இல்லவே இல்லை. மாடர்ன் பெண்ணாக இருந்தாலும் திருச்சியில் நான் ஒரு தமிழ்ப் பெண்ணாக பாவாடை தாவணி கட்டித் திரிந்தவள்தான். தமிழ்க் கலாசாரம், நமது பண்பாட்டின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவள். எனது அம்மாவிடமும் உறவினர்களிடமிருந்தும் நான் என்ன கற்றுக்கொண்டேனோ, அதை அன்னபூரணி கதாபாத்திரத்தில் அப்படியே வெளிப்படுத்தி யிருந்தேன்.

என் தோழி ஒருத்தி படத்தைப் பார்த்துவிட்டு, “நவீன ஆடைகள் அணிந்து மிஸ் இண்டியா வென்ற நீதானா அது?” என்று கேட்டாள். நடிப்பில் எனது குரு சியான் விக்ரம் என்று அவளிடம் சொன்னேன்.

டிஎஸ்பி படத்துக்கு எப்படித் தேர்வானீர்கள்... சியான் விக்ரம் எந்த வகையில் உங்களுக்கு குரு?

மிஸ் இந்தியா டைட்டில் வென்ற பிறகு பல சினிமா வாய்ப்புகள் வந்தன. ஆனால், அப்போது நான் மிகவும் சின்னப் பெண்ணாக இருந்தேன். எனது உடல் தோற்றம் கதாநாயகர்களுக்கான தங்கை கதாபாத்திரங்கள் செய்வதற்கு ஏற்றதுபோல்தான் அப்போது இருந்தது. அதனால், நடிப்பதற்காக வாய்ப்புத் தேடுவதை 2 வருடங்கள் தள்ளிப்போடலாம் என்று முடிவுசெய்தேன்.

அனுகிரீத்தி வாஸ்

அந்த நேரத்தில்தான் கோவிட் பெருந்தொற்றுக் காலம் வந்து எனக்கு தேவையான அவகாசத்தைக் கொடுத்துவிட்டது. பிறகு இரண்டாவது லாக் டவுன் போய்க்கோண்டிருந்த நேரத்தில் இயக்குநர் பொன்ராம் சாரின் அலுவலகத்திலிருந்து புதிய படத்துக்கான ஆடிசனுக்கு அழைப்பு வந்தது. ஒரு காட்சியை நடிக்கச் சொல்லி பொன்ராம் சார் படம் பிடித்தார். அப்போது யார் ஹீரோ, எனக்கு என்ன கேரக்டர் என்பதையெலாம் அவர் சொல்லவில்லை. ஆடிசனில் தேர்வானேனா என்பதுகூட தெரியவில்லை.

அடுத்த சில தினங்களில், “நீங்கள் கதாநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறீர்கள். விஜய்சேதுபதி ஹீரோ” என்று பொன்ராம் சார் சொன்னதும் துள்ளிக் குதித்தேன். அவர் நம்ம மதுரைக்காரர். நல்ல மனிதர். சிறந்த கமர்ஷியல் இயக்குநர்.

விஜய்சேதுபதியுடன் நடித்த அனுபவம் எப்படியிருந்தது?

விஜய்சேதுபதியை ஒரு கிரேட் கோ-ஸ்டார் என்பேன். ஏனென்றால், அவர் ஒரு ஸ்டார் போலவே நடந்துகொள்ள மாட்டார். எனக்கும் விஜய்சேதுபதி சாருக்கும் இடையிலான உரையாடல் காட்சிகளில், எனக்கு பாய்ன்ட் ஆஃப் வியூ ஷாட்கள் நிறைய இருந்தன. அவற்றைப் படமாக்கும்போது விஜய்சேதுபதி சார் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. அவரது இடத்தில் ஒரு உதவி இயக்குநரைக் கூட உட்கார வைத்து படமாக்கிவிடலாம். ஆனால், விஜய்சேதுபதி சார்.. “இது என்னோட 47-வது படம்; அனுவுக்கு முதல் படம். அதனால், பாய்ன்ட் ஆஃப் வியூ ஷாட்களிலும் நானே நடிக்கிறேன்” என்று சொல்லி ஒரு துணை நடிகரைப்போல் அர்பணிப்புடன் அந்தக் காட்சிகளில் வந்து உட்கார்ந்து நடித்தார்.

அனுகிரீத்தி வாஸ்

அதுபோன்ற ஷாட்களில் அவரது ரியாக்‌ஷனைப் பார்த்து நடிப்பது புதுமுகமான எனக்கும் அவ்வளவு உதவியாக இருந்தது. முதல் படத்திலேயே இப்படியொரு சிறந்த நடிகருடன் இப்படிப்பட்ட தயாளருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். ‘டைகர் நாகேஷ்வர ராவ்’ படத்தில் ரவிதேஜாவுடன் நடித்த அனுபவமும் மறக்க முடியாது. அவ்வளவு பெரிய படத்தில் எனக்கு இவ்வளவு அழுத்தமான கதாபாத்திரமும் தெலுங்கில் சிறந்த அறிமுகமும் கிடைத்திருப்பதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்.

விக்ரம் சாரைப் பற்றிக் கேட்டீர்கள். நான் பிறந்த வருடத்தில் வெளியான படம் என்று அம்மா எனக்கு 10 வயதில் ‘சேது’ படத்தைக் காட்டினார். அப்போது முதலே எனக்கு விக்ரம் சாரின் நடிப்பு மற்றும் கதாபாத்திர உருமாற்றம் செய்து காட்டும் அவரது திறமையின் மீது ஈர்ப்பு வந்துவிட்டது.

நாம் நடிகராக மாறும்போதும் சியான் விக்ரமின் வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். கமர்ஷியல் கதாநாயகியாக படங்களில் நடிக்கும் அதேசமயம் கணமான கதாபாத்திரங்களும் செய்து டைரக்டர் ஆக்டர் வெர்சடைல் ஆக்டர் ஆக பெயர் வாங்க வேண்டும் என்பதே எனது கனவும் லட்சியமும். அதற்கான தொடக்கப் படிகளாக தமிழ், தெலுங்கில் அறிமுகம் கிடைத்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.

2018-ல் இருந்தே லைம் லைட்டில் இருக்கிறீர்கள். சோஷியல் மீடியா பற்றி ஒரு பிரபலமாக உங்கள் கருத்தும் அதன் மீதான அணுகுமுறையும் என்ன?

ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை அது எனக்கு ஃபன் ஆன ஒரு விஷயமாக இருந்தது. ரொம்பவும் சில் ஆக எடுத்துக்கொள்வேன். ஆனால், இப்போது அப்படியல்ல. சமூக வலைதளங்கள் டிரெண்டிங் பிளாட்ஃபார்ம்ஸ்’ என்பதைத் தாண்டி என்னைப் போன்றவர்களுக்கு அவசியத் தேவையாகிவிட்டது.

அனுகிரீத்தி வாஸ்

ஏனென்றால், எங்கே ஆடிசன் என்றாலும் இயக்குநர், தயாரிப்பாளர் நம்மை, நமது திறமையைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றாலும் “முதலில் உங்கள் இன்ஸ்டா ஐடி அனுப்புங்கள்” என்று தான் கேட்கிறார்கள். அதனால், இதுவரை நாம் என்ன செய்திருக்கிறோம். நமது திறமைகள் என்ன என்பதையெல்லாம் அதில் காட்சிக்கு வைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

உண்மையில் சோஷியல் மீடியா வழியாக ரீச் நிறைய கிடைக்கிறது. ஆனால், எவ்வளவு லைக்ஸ் வாங்குகிறோம், அன்றாடம் போஸ்ட் போட வேண்டிய தேவை என போட்டி ஏற்படும்போதுதான் 5 வருடம் ஃபன் ஆக இருந்தது போலவே இப்போதும் இருக்கக்கூடாதா என ஏங்க வேண்டியிருக்கிறது. எப்படியிருப்பினும் சமூக வலைதளங்கள்தான் சமூகத்தைப் பார்ப்பதற்கான இன்னொரு கண்ணாடி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE