கருத்துரிமை அனைவருக்கும் உள்ளது; `மாமன்னன்' படத்துக்கு தடை விதிக்க முடியாது: உயர்நீதிமன்றம்

By கி.மகாராஜன்

`மாமன்னன்' திரைப்படத்துக்கு தடை கோரிய மனுவை அவசரமாக விசாரிக்க மதுரை உயர்நீதிமன்றக் கிளை மறுத்துவிட்டது.

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையை சேர்ந்த மணிகண்டன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அவரது அந்த மனுவில் 'திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ், பரியேறும் பெருமாள், கர்ணன், தற்போது மாமன்னன் போன்ற குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த படங்களை எடுத்து வருகிறார்.

கடைசியாக இவர் எடுத்த 'கர்ணன்' படம் கொடியன்குளம் கிராமத்தில் நடைபெற்ற ஜாதி கலவர சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.
தற்போது இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள 'மாமன்னன்' ஜூலை 29-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதனுடைய பாடல்கள் மற்றும் டிரெய்லர் ஆகியவை இரு சமூகத்திற்கு இடையே பிரச்சனையை காட்டும் விதமாகவே அமைந்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட காத்தப்ப பூலித்தேவன் என்பவரை 'மாமன்னன்' என அழைப்பார்கள். அவரை தவறாக சித்தரிக்கும் வண்ணம் இப்படம் அமைந்துள்ளது.

மேலும் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள உதயநிதி, தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் உள்ளார். உதயநிதி ஸ்டாலின் இப்படத்தில் நடித்துள்ளார். இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 173 (ஏ) க்கு எதிராக உள்ளது.

இப்படம் வெளிவந்தால் தேவர், தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்கு இடையே பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, 29.06.2023 அன்று 'மாமன்னன்' படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கவும், இப்படத்தை திரையிலோ, எந்த ஓடிடி தளம் போன்ற வேறு ஏதேனும் தளத்திலோ ஒளிபரப்பவும் தடைவிதித்து உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்குமாறு நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன், எல்.விக்டோரியாகவுரி ஆகியோர் முன்பு மனுதாரர் தரப்பில் இன்று முறையீடு செய்யப்பட்டது. அதற்கு நீதிபதிகள், "இந்த மனுவை அவசர வழக்காக விசாரணை செய்யத் தேவையில்லை. திரைப்படத்துக்கு திரைப்பட தணிக்கைத்துறை அனுமதி வழங்கிய பிறகு நீதிமன்றம் தலையிட முடியாது, சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் காவல்துறையினர் பார்த்து கொள்வார்கள். திரைப்படம் என்பது மக்கள் பார்க்கவே. இரண்டு நாட்களில் அதனை மறந்து விடுவார்கள். பேச்சு உரிமை கருத்து உரிமை அனைவருக்கும் உள்ளது" என தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE