திரை விமர்சனம்: வாழை

By KU BUREAU

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புளியங்குளத்தில் மேல்நிலைப்பள்ளி மாணவன் சிவனைந்தன் (பொன்வேல்). தந்தையை | இழந்துவிட்ட அவன், அம்மா (ஜானகி), அக்கா வேம்பு (திவ்யா துரைசாமி) ஆகியோருடன் வார இறுதி, விடுமுறை நாள்களில் வாழைத் தார் சுமக்கும் வேலை செய்கிறான். மிகுந்த வலியைக் கொடுக்கும் அந்த வேலையைச் செய்ய அவனுக்கு விருப்பம் இல்லை. அதிலிருந்து தப்பிக்க முயன்றாலும் குடும்ப சூழல், அம்மாவின் வற்புறுத்தல் காரணமாக அதில் தொடர்ந்து ஈடுபட நேர்கிறது.

பள்ளியில் ஆசிரியர் பொற்கொடி (நிகிலா விமல்) மீதான இனம்புரியாத ஈர்ப்பு அவனுக்கு இந்த வலியிலிருந்து ஆசுவாசம் அளிக்கிறது. இந்நிலையில் வாழைத்தார் சுமக்கும் தொழிலாளிகளின் கூலி உயர்வுப் போராட்டத்தை முன்னெடுக்கிறான் கனி (கலையரசன்). கூலியை உயர்த்திக்கொடுக்கும் முதலாளி (ஜே.எஸ்.சதீஷ் குமார்) அதை வேறு வழியில் சரிகட்ட நினைக்கிறார். அதனால் தொழிலாளர்களுக்கு ஒரு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. அது என்ன? வாழைத்தார் சுமக்கும் பணியிலிருந்து சிவனைந்தன் மீண்டானா? ஆகிய கேள்விகளுக்கு விடை அளிக்கிறது மீதிக் கதை.

தன் வாழ்விலிருந்து உயிர்ப்பு மிக்க கதைகளை திரைப்படங்களின் மூலம் தொடர்ந்து பதிவு செய்பவர் இயக்குநர் மாரி செல்வராஜ். அதை இந்தப் படத்திலும் தொடர்ந்திருக்கிறார். விடுமுறை மறுக்கப்படும் சிறுவனின் ஏக்கத்தையும் கூலித் தொழிலாளிகளின் வாழ்க்கைப் பாடுகளையும் இணைத்து கதையை வடிவமைத்திருக்கிறார். இந்தத் துயரங்களை மட்டும் முன்னிறுத்தாமல் சிறுவர்கள், எளிய மக்களின் இயல்பான உணர்வுகளின் வழியாக புன்னகை அரும்ப வைக்கும் சுவாரஸ்ய காட்சிகளையும் இணைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார்.

சிவனைந்தனும் அவன் வகுப்புத் தோழனும் அவனைப்போலவே வாழைத்தார் சுமப்பவனுமான சேகர் (ராகுல்) இணையின் காட்சிகள் முதல் பாதி திரைக்கதையை ரசிக்கும் வகையில் நகர்த்திச் செல்ல உதவியுள்ளன. இவர்களில் ஒருவர் ரஜினி ரசிகராகவும் இன்னொருவர் கமல் ரசிகராகவும் இருக்க அது தொடர்பாக இருவரும் ஒருவரை ஒருவர் கிண்டலடித்துக் கொள்வது சிரிப்பலைகளை எழுப்புகின்றன. அதே நேரம் இருவருக்கும் இடையிலான நட்பும் நேசமும் நுட்பமாகப் பதிவாகியுள்ளது.

தொழிலாளர்கள் கூலி உயர்வுப் போராட்டம், இடைத் தரகருடனான வாக்குவாதங்கள் ஆகிய காட்சிகளில் தொழிலாளர்களின் துயரங்களும் சுயமரியாதை உணர்வும் இயல்பாக உணர்த்தப்படுகின்றன. கனிக்கும் வேம்புவுக்கும் (திவ்யா துரைசாமி) இடையில் எழும் காதல், திரைக்கதையை நகர்த்துவதற்கான உத்திதான் என்றாலும் சில இடங்களில் ரசிக்க வைக்கிறது.

கதையில் போதிய அடர்த்தி இல்லாததால் இரண்டு பாதிகளிலும் திரைக்கதை சற்று தொய்வடைகிறது. கல்வியில் சிறந்து விளங்கும் சிவனைந்தனை வாழைத்தார் சுமக்கும் பணியில் ஈடுபடுத்துவதற்கு அவனது அம்மா சொல்லும் காரணம் முரணாக உள்ளது. ஆனால், மனதை உலுக்கி எடுத்துவிடும் இறுதிப் பகுதி இதுபோன்ற குறைகளை மறக்கச் செய்துவிடுகின்றன.

பொன்வேல் இயல்பான தோற்றம், உடல்மொழி, உணர்வுகளை வெளிப்படுத்துதல் என அனைத்து வகையிலும் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விடுகிறார். அவருக்கு இணையாக ராகுலும் வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் அழகாக ஸ்கோர் செய்திருக்கிறார். ஜானகி, திவ்யா துரைசாமி, நிகிலா விமல், கலையரசன் என துணைக்கதாபாத்திரங்களில் நடித்துள்ள அனைவரும் சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணின் பாடல்கள், பின்னணி இசை இரண்டும் கதைக்கும் கதைச் சூழலுக்கும் பொருத்தமாகவும் சிறப்பு சேர்ப்பதாகவும் அமைந்துள்ளன. தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு மலைகள், வாழைத் தோப்புகள், புல்வெளிகளின் பசுமையை உணரச் செய்கின்றன.

சிறுவனாக இருந்தபோது தன்னை அதிர்ச்சியில் உறைய வைத்த ஒரு துயரச் சம்பவத்தை மேம்பட்ட கலைப்படைப்பாக முன்வைத்திருக்கிறார் மாரி செல்வராஜ். திரைக்கதையில் சில குறைகள் இருந்தாலும் இது தவறவிடக் கூடாத திரை அனுபவம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE