எனக்கும் அரசியல் ஆசை இருக்கு... நடிகை வாணி போஜன் ஓப்பன் டாக்!

By காமதேனு

எனக்கும் அரசியல் ஆசை இருக்கிறது. ஆனால், விரைவில் அரசியலுக்கு வருவேனா என்பது குறித்து தெரியவில்லை என நடிகை வாணி போஜன் பேசியுள்ளார்.

வாணி போஜன்

சினிமாவில் பிரபலமான பிறகு, அந்த பெயரையும் புகழையும் பயன்படுத்தி அரசியலுக்குள் பிரபலங்கள் நுழைவது புதிது கிடையாது. எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த், சரத்குமார் என இப்படி ஏராளமான பிரபலங்கள் அரசியலிலும் சாதித்துள்ளனர். அந்த வரிசையில் நடிகர் விஜயும் கடந்த பிப்ரவரி 2ம் தேதி, ‘தமிழக வெற்றி கழகம்’ எனத் தனது கட்சியை அறிவித்து அரசியல் பாதையில் நடை போடுகிறார். விரைவில் முழுநேர அரசியலுக்கும் வர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து நடிகர் விஷாலும் இயற்கை முடிவு செய்தால் நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என அவருடைய அரசியல் ஆசையை கோடிட்டு காட்டியிருக்கிறார். இந்நிலையில், நடிகை வாணி போஜனும் இந்த பட்டியலில் இணைந்துள்ளார் என ரசிகர்கள் அவருடைய பேட்டியை பார்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

இன்று நடைபெற்ற நகைக் கடை திறப்பு விழா ஒன்றில் நடிகை வாணி போஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவரிடம் அரசியல் ஆசை இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பிய போது, "ஒரு பிரபல அரசியல் தலைவரின் வாழ்க்கையை நாங்கள் வெப் சீரிஸாக எடுத்தோம். அதில் நான் நடித்த போது எனக்கு அரசியல் ஆசை இருந்தது. இப்பொழுதும் இருக்கிறது. ஆனால், விரைவில் அரசியலுக்கு வருவேனா என்பது குறித்து தெரியவில்லை" என்றார்.

அவரிடம் விஜய், விஷால் அரசியலுக்குள் வருவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டதற்கு, "அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். என்னைக் கேட்டால் நடிகர் விஜய்க்கு அரசியலில் மக்கள் ஒருமுறை வாய்ப்பு கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர் மக்களுக்காக என்ன செய்கிறார், அவருடைய நோக்கம் என்ன என்பது பற்றி நமக்கும் தெரியவரும்" என்றார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடிகை வாணி போஜன் தன்னுடைய அரசியல் ஆசையை வெளிப்படுத்தியிருப்பது ரசிகர்கள் மத்தியில் புருவம் உயர்த்த வைத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE