நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள ‘பிசாசு2’ படம் வெளியாகுமா என்பது குறித்த கேள்விக்கு இயக்குநர் மிஷ்கின் பதிலளித்துள்ளார்.
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு ‘பிசாசு2’ திரைப்படம் வெளியாகி வெற்றிப் பெற்றது. இதனால், படத்தின் இரண்டாம் பாகத்தை அறிவித்தார் மிஷ்கின். ஆண்ட்ரியா கதாநாயகியாக நடித்திருக்கும் இந்தப் படம் கடந்த 2021ஆம் ஆண்டே வெளியாவதாக இருந்தது. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளில் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்திருந்ததால் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியது தணிக்கைக் குழு. இந்தக் காட்சிகளைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிடத் தயங்கியதால் பின்பு அவை படத்தில் இருந்து நீக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.
படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டே கிட்டத்தக்கட்ட இரண்டு வருடங்கள் கடந்த நிலையில், படம் வெளியாகுமா வெளியாகாதா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இதற்கு இயக்குநர் மிஷ்கின் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிலளித்துள்ளார்.
“தனிப்பட்ட முறையில் தயாரிப்பாளர் முருகானந்தத்திற்கு சில பிரச்சினைகள் இருந்தது. மேலும், படத்தின் சில காட்சிகளும் வெளியிடலாமா என்று யோசித்து வந்தார். அந்தப் பிரச்சினைகள் எல்லாம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. படத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. ரசிகர்களின் ரசனையும் மாறியிருக்கிறது. அதனால், இந்த ஆண்டு இறுதிக்குள்ளாகவோ அல்லது அடுத்த ஆண்டோ நிச்சயம் ‘பிசாசு2’ வெளியாகும்” எனக் கூறியிருக்கிறார்.