விஜய் கட்சி கொடிக்கு திடீர் சிக்கல்: அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலேயே அரசியல் சடுகுடு ஆரம்பம்!

By KU BUREAU

தவெக தலைவர் விஜய் அறிமுகப்படுத்தியுள்ள கட்சி கொடிக்கு சிக்கல் வந்துள்ளது.

நடிகரும் தவெக தலைவருமான விஜய் இன்று பனையூரில் தனது கட்சி கொடியை அறிமுகம் செய்தார். கட்சியின் மேலே, கீழே சிவப்பு நிறமும் நடுவில் மஞ்சள் நிறமும் அந்தக் கொடியில் அமைந்திருந்தது. நடுவில் வாகை மலரும், அதை சுற்றி நட்சத்திரங்களும் வாகை மலர் பக்கவாட்டில் பிளிறும் இரு போர் யானைகளும் அமைந்திருக்கும் படி கொடி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கொடிக்குப் பின்னால் ஒரு சுவாரஸ்ய வரலாறு இருப்பதாகவும் அதை கட்சியின் முதல் மாநில மாநாட்டில் சொல்வதாகவும் விஜய் கூறியிருக்கிறார்.

இந்தக் கொடிக்கு தற்போது சிக்கல் வந்துள்ளது. தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை படத்தை பயன்படுத்துவது தேர்தல் விதியின்படி தவறானது. உடனடியாக விஜய் கட்சியின் கொடியில் உள்ள யானை படத்தை நீக்க வேண்டும். இல்லையென்றால் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனுவும் மற்றும் வழக்கும் தொடுக்கப்படும் என தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சேபம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தவெக (tvk) என தனது கட்சியை அறிமுகப்படுத்தி அதன் சுருக்கெழுத்தாக டிவிகே என பயன்பாட்டிற்கு கொண்டு வந்த ஆரம்ப காலத்திலேயே தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தங்கள் கட்சியை அப்படித்தான் குறிப்பிட்டு வந்தோம் என சொல்லி தவெகவுக்கு ஆட்சேபம் தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

இதுமட்டுமல்லாது, விஜய் கட்சியின் இந்த யானை சின்னம் ஃபெவிகால் லோகோவை திருப்பி போட்டு விட்டார் எனவும், ஸ்பெயின் நாட்டு கொடியை காப்பி அடித்து விட்டார் எனவும் கட்சி கொடி அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலேயே மீம்ஸ்களாக இணையத்தில் வலம் வரத் தொடங்கி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE