மலையாள நடிகைகள் பாலியல் ரீதியாக இணங்கினால் தான் வாய்ப்பு: அதிரவைத்த ஹேமா கமிட்டி அறிக்கை!

By KU BUREAU

திருவனந்தபுரம்: மலையாள நடிகைகள் பாலியல் ரீதியாக இணங்கினால் மட்டுமே வாய்ப்பு என்ற நிலையை ஹேமா கமிட்டி தோலுரித்து காட்டியிருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.

படப்பிடிப்பில் பங்கேற்கும் அனைத்து நிலை பெண்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மலையாள சினிமாத் துறையின் பெண்கள் அமைப்பு சார்பில் அம்மாநிலத்தின் முதல்வர் பினராயி விஜயனுக்கு மனு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடிகைகள், தொழில்நுட்ப பெண் கலைஞர்கள் என பலரும் சந்திக்கும் பாலியல் ரீதியான பிரச்சினைகள் குறித்து அறிக்கை தர வேண்டும் என நீதிபதி ஹேமா தலைமையில் கேரள அரசு கமிஷன் அமைத்தது. பல நடிகைகளிடம் விசாரணை நடத்தி கடந்த 2019ம் ஆண்டு இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், இதனை வெளியிடக் கூடாது என எழுந்த பல எதிர்ப்புகளை தாண்டி தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் உத்தரவுப்படி நேற்று இந்த அறிக்கை வெளியானது.

அந்த அறிக்கையில், ‘பாலியல் உறவுக்கு இணங்கும்படி இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோர் நடிகைகளை கட்டாயப்படுத்துவது கேரள சினிமா துறையில் வழக்கமாக இருக்கிறது. அவர்களுக்கு மட்டுமே பட வாய்ப்புகள் கிடைக்கும் என மிரட்டுகிறார்கள். முத்தக்காட்சி, நிர்வாணமாக நடித்தல் போன்ற விஷயங்களுக்கு அவர்கள் கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். இதில் பல முன்னணி நடிகர்களும் இருக்கிறார்கள். இந்த விஷயத்திற்கு நடிகைகள் மறுத்தால் அவர்களுக்கு பல தொல்லைகள் தரப்படுகிறது. இதை எல்லாம் மீறி அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க நினைத்தால் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என பயப்படுகிறார்கள்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாது போதைப் பொருட்கள், மதுபானம் போன்றவற்றை படப்பிடிப்பு தளங்களில் பயன்படுத்துவது, குற்றப்பின்னணி உள்ளவர்களை ஓட்டுநர்களாக நியமிப்பது போன்ற விஷயங்களை தடை செய்ய வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் மலையாளத் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE