திரை விமர்சனம்: கொட்டுக்காளி

By KU BUREAU

'விடுதலை', 'கருடன்' படங்களுக்குப் பிறகு நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள படம் ’கொட்டுக்காளி’. பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைக் குவித்த நிலையில், ‘கொட்டுக்காளி’ ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறதா என்பதை பார்க்கலாம்.

முறைப்பெண் மீனா (அன்னாபென்) மீது அளவுக்கடந்த காதல் வைத்திருக்கிறார் பாண்டி (சூரி). பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு மீனாவுக்கும் பாண்டிக்கும் திருமணம் செய்ய குடும்பம் யோசிக்க, மீனாவின் ஆசைக்காக குடும்பத்தின் ஆட்சேபனையையும் மீறி அவரை கல்லூரிக்கு அனுப்பி படிக்க வைக்க அனுமதிக்கிறார் பாண்டி. ஆனால்,படிக்க சென்ற இடத்தில் மீனாவுக்கு வேறு ஒருவர் மீது காதல் வருகிறது. இந்தக் காதல் பேயை மீனாவின் மனதில் இருந்து விரட்ட பாலமேடு பகுதியில் இருக்கும் சாமியாரிடம் பாண்டி, மீனா குடும்பத்தினர் அழைத்து செல்கிறார்கள். விடியற்காலை ஆரம்பித்து சாமியாரிடம் சென்று சேருவது வரையிலான கதைதான் படம். இந்தப் பயணத்தில் என்னவெல்லாம் நடக்கிறது? மீனாவின் பேய் நீங்கியதா? உண்மையிலேயே யாருக்குப் பேய் பிடித்திருக்கிறது? பாண்டியின் காதல் என்னவானது என்பதுதான் 'கொட்டுக்காளி'.

கதையின் நாயகனாக ’விடுதலை’, ’கருடன்’ படங்களில் பார்த்த சூரிக்கும் ‘கொட்டுக்காளி’ சூரிக்கும் மலையளவு வித்தியாசம். நடிப்பில் அடுத்த பாய்ச்சலைக் காட்டியிருக்கிறார். அதிலும், இடைவேளை சமயத்தில் அவர் எடுக்கும் ஆண்டி ஹீரோ அவதாரம் வேற லெவல்! கதையின் நாயகி அன்னாபென். படத்தில் சூரியின் தங்கை மகனாக வரும் குட்டி பையன் படத்தில் பேசும் வசனங்களை விட குறைவான வசனம்தான் அவருக்கு. இரண்டு மணி நேரத்துக்கும் மேலான படத்தில் ஐந்து வார்த்தைகளுக்குள்ளான ஒரே வசனம் தான். அதுவும் அந்த வசனம் அமைந்த இடம் நச்!

அந்த ஒரு வசனம் தவிர்த்து படம் முழுக்க உணர்ச்சிகளால் மட்டுமே நடிப்பைக் கடத்தும் சவாலான கதாபாத்திரம். குடும்பத்தில் எல்லோரும் திட்டும் போது அமைதியாகவே இருப்பது, ஆட்டோவில் பயணிக்கும்போது காட்டும் இறுக்கம், சாமி கும்பிடும்போது சூரியும் அன்னாபென்னும் பார்த்துக் கொள்ளும் தருணம் என ஒவ்வொரு காட்சியிலும் அழுத்தம் திருத்தமான நடிப்பைக் கொடுத்து ஸ்கோர் செய்கிறார். சூரி- அன்னாபென் தவிர்த்து படத்தில் சூரியின் தங்கைகள், அப்பா, மாமா, அத்தை என அனைவரின் கதாபாத்திரங்களும் பொருத்தமாக பொருந்திப் போகிறது.

படத்தில் இசை கிடையாது. அந்தக் குறை தெரியாத அளவிற்கு சுரேன்.ஜி, அழகிய கூத்தனுடைய ஒலி வடிவமைப்பு கதையோடு பொருந்திப் போகிறது. ஒளிப்பதிவாளர் சக்திவேலின் ஒளிப்பதிவு கவிதையாக ஒவ்வொரு காட்சியிலும் ஒரு விஷயத்தை பார்வையாளர்களுக்கு உணர்த்துகிறது. நவீன காலத்திலும் பெண்கள் மீதான ஒடுக்குமுறை, மக்களின் மூடநம்பிக்கைகள், பக்தி என்ற பெயரில் போலி சாமியார்களின் உண்மை முகத்தை தோலுரித்தது.

சிங்கிள் ஷாட்டில் வரும் சில காட்சிகள், குறிப்பாக ஜனரஞ்சக சினிமாவில் இருந்து விலகிய கிளைமாக்ஸ் என வசனங்களே இல்லாமல் காட்சிகள் மூலம் அழுத்தமாக பதிய வைத்ததில் பாராட்டுகள் பெறுகிறார் இயக்குநர் வினோத் ராஜ்.

படத்தின் குறைகள் என்றால் படத்தின் நீளத்தை சொல்லலாம். பல இடங்களில் காட்சிகள் நகர்வதற்கே நீண்ட நேரம் எடுப்பதுபோல தோன்றி அயர்ச்சியைத் தருகிறது. இந்த வருடம் தமிழ் சினிமாவில் வெளியான முக்கிய படங்களில் ஒன்றாக ‘கொட்டுக்காளி’ கெத்து காட்டுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE