'லியோ' படத்தில் நடித்திருப்பது குறித்து பிக் பாஸ் ஜனனி நெகிழ்ச்சியாகப் பகிர்ந்துள்ளார்.
'லியோ' படத்தில் பிக் பாஸ் புகழ் ஜனனி நடித்திருக்கிறார். பிக் பாஸ் தமிழ் ஆறாவது சீசனில் இலங்கையைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளராக ஜனனி கலந்து கொண்டார். பல நிகழ்ச்சிகளையும் அவர் தொகுத்து வழங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
'லியோ' படம் மூலம் தற்போது தமிழ் சினிமாவிலும் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார் ஜனனி. இந்தப் படத்தில் நடித்தது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்திருப்பதாவது, `தளபதி விஜய்யுடன் நடித்தது எனக்கு இப்போதும் கனவு போல இருக்கிறது. ஆனால், இதுதான் நிஜம். இது என் முதல் திரைப்படம். தளபதியுடன் நடிக்க வேண்டும் என்ற கனவு முதல் படத்திலேயே நிறைவேறியது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்த வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்ததற்கும், இத்தகைய பேரனுபவத்தை ஏற்படுத்திக் கொடுத்ததற்கும் நன்றி! தளபதியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் எனக்குக் கிடைத்தவுடன் அதனை பதிவிடுகிறேன். த்ரிஷா பழகுவதற்கு இனிமையானவர்!' எனக் குறிப்பிட்டிருக்கிறார். ஜனனிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.