லியோ விமர்சனம் : ஹிட் லிஸ்ட்ல சேருமா?! இதெல்லாமே மைனஸ்

By காமதேனு

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா, சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த், அர்ஜுன், மடோனா செபஸ்டியன், அர்ஜுன்,மிஷ்கின், கவுதம் மேனன், ஜார்ஜ் மரியான், மன்சூர் அலிகான், சாண்டி என முக்கிய நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் ‘லியோ’ படத்தின் இசையமைப்பாளர் அனிருத். மனோஜ் பரமஹம்ஸ ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளராக பிலோமின் ராஜ் பணியாற்றியுள்ளார்.

கடை ஒன்றை நடத்தி வரும் பார்த்திபன் (விஜய்) தனது மனைவி (திரிஷா), குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். பார்த்திபன் வசித்து வரும் பகுதியில் நடைப்பெறுகிற சில பிரச்சினைகளில் சிக்கி, சிலருடன் சண்டை நேர்கிறது. பின் அந்த பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கிறார். அதனால் அந்த பகுதி மக்களிடையே பார்த்திபன் பிரபலமாகிறார்.

’லியோ’

மக்களிடையேயான பிரபலமே பார்த்திபனுக்கு பிரச்சினையாக மாறுகிறது. பார்த்திபன் குறித்து ஆண்டனி தாஸ் (சஞ்சய் தத்) மற்றும் ஹரோல்ட் தாஸ் (அர்ஜுன்) ஆகிய இருவரின் கவனத்திற்கும் செல்கிறது. பார்த்திபனின் செயல்கள், இவர்களின் பழைய எதிரியான லியோ தாஸை நினைவுபடுத்துகின்றன.

இவர்களின் போதை கடத்தல் கும்பல் பார்த்திபனைக் கொன்று பழி தீர்ப்பதற்காக தேடியலைகிறது. அந்த போதை கும்பலிடம் இருந்து பார்த்திபன் எப்படி தப்பிக்கிறார், எதனால் பார்த்திபனைக் கொல்ல அந்த கும்பல் துடிக்கிறது? என்பது தான் ‘லியோ’ படத்தின் கதை.

ஹிஸ்டரி ஆஃப் வைலென்ஸ் எனும் ஆங்கிலப் படத்தின் கதை உரிமையைப் பெற்று, விஜய் ரசிகர்களுக்காக கதையில் கனகச்சிதமான மாற்றங்களைச் செய்து இயக்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். படத்தில் எங்கேயும் ஆங்கிலப்படத்தின் சாயல் தெரியாதது பெரிய ப்ளஸ்.

’லியோ’ படத்தில் விஜய், த்ரிஷா

நீ...ண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் - த்ரிஷா ஜோடி ரசிகர்களைக் கவர்ந்திருக்கின்றனர். தியேட்டரில் ஆன் ஸ்கிரீனில் த்ரிஷாவின் காட்சிகளுக்கும் விசில் பறக்கிறது. லோகேஷ் கனகராஜ், லியோவிலும் தன்னுடைய திரைக்கதை மேஜிக்கைத் தொடர்கிறார். படம் எல்சியுவில் தான் உள்ளது. அனிருத் மீண்டுமொரு முறை இளைஞர்களை வசியம் செய்திருக்கிறார். படம் முழுக்கவே அனிருத் இசை விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டங்களைத் தர தவறவில்லை.

ஆக்‌ஷன், த்ரில்லர் என படத்தில் விஜய், தன் ரசிகர்களை ஏமாற்றாமல் தெறிக்க விட்டிருக்கிறார். சஞ்சய் தத், அர்ஜுன் என இருவருமே தங்களின் கதாபாத்திரத்தை கனகச்சிதமாக செய்திருக்கிறார்கள். படத்தின் விஎஃப்.எக்ஸ் காட்சிகள் அத்தனை தரம். படத்தின் முதல் 10 நிமிட காட்சிகள் மிஸ் செய்யக் கூடாதவை தான். இரண்டாம் பாதியில் வரும் விஜய்யின் ‘நான் ரெடி’ பாடலில் தியேட்டர் அதிர்கிறது.

விஜய்யின் ஹிட் லிஸ்ட்டில் இன்னொரு படமாக ‘லியோ’ அமைந்திருக்கிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியுமே தொடர்புடையதாக இருப்பதால் முதல் பாதி ரோலர் கோஸ்டர் ரைடு போன்ற திரைக்கதையால் ரசிகர்களைக் தியேட்டரின் இருக்கையில் உட்கார வைத்திருக்கிறது. லியோ விஜய் ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும், முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜின் படமாக வெளிவந்திருப்பது கூடுதல் பலம்.

படத்தின் ஆகப் பெரும் குறை, உருக்கமான செண்டிமெண்ட் காட்சிகள் ரசிகர்களிடையே எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாதது தான். படம் முழுக்க வரிசையாய் வில்லன்கள் இருந்தாலும் யாருடைய கதாபாத்திரமும் அழுத்தத்தை ஏற்படுத்தவில்லை. சிங்கிள் சீனில் வந்தாலும், ‘ரோலக்ஸ்’ சூர்யா போன்ற மிரட்டல் காட்சிகள் வில்லன்களுக்கு இல்லை.

படத்தின் முதல் பாதியில் இருந்த அத்தனை விறுவிறுப்பும், இரண்டாம் பாதியிலும் தொடர்ந்திருந்தால், லியோ இன்னொரு கில்லியாக காலம் கடந்தும் விஜய்யின் மகுடத்தில் நின்றிருக்கும். முதல் பாதியில் மகிழ்விக்கிற லியோ, இரண்டாம் பாதியில் பொறுமையை சோதிக்கிறார். விஜய்யின் அறிமுக பாடலுக்குப் பின்னர் தியேட்டரில் நெளிகிறார்கள்.

படம் முழுக்கவே சண்டை, சண்டை என அடுத்தடுத்து வருவதும் அயர்சியைத் தருகிறது. மொத்தத்தில், மாஸ்டர், பீஸ்ட் படங்களில் விட்டதை லியோ படத்தின் மூலமாக கெத்தாக பிடித்திருக்கிறார் விஜய்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE