கதாநாயகியை மையப்படுத்திய படமாக நடிகை கீர்த்தி சுரேஷின் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கிறது ‘ரகு தாத்தா’.
வள்ளுவன் பேட்டை எனும் ஊரில் வங்கி ஒன்றில் அப்பர் டிவிஷன் கிளர்க்காக வேலைப் பார்த்து கொண்டிருக்கிறார் கயல்விழி பாண்டியன் (கீர்த்தி சுரேஷ்). தன் ஊரில் இந்தி திணிப்பை எதிர்க்கும் பெண்ணாக, முற்போக்கு சிந்தனைகள் பேசும் பெண்ணாக தன்னுடைய தாத்தா எம்.எஸ். பாஸ்கரால் வளர்க்கப்படுகிறார் கீர்த்தி சுரேஷ். எதிர்பாராத சமயத்தில் எம்.எஸ். பாஸ்கருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, தாத்தாவின் ஆசையை நிறைவேற்ற கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
தன்னைப் போலவே முற்போக்கு சிந்தனைகள் கொண்டவர் என நினைத்து தமிழ் செல்வன் என்பவரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார். அந்த சமயத்தில் அவருக்கு ஒரு மொட்ட கடுதாசி வருகிறது. அது மூலமாக, தான் தேர்ந்தெடுத்த மாப்பிள்ளை ஒரு ஆணாதிக்கவாதி, பிற்போக்கு சிந்தனைகள் நிறைந்தவர் என்கிற உண்மை கீர்த்தி சுரேஷூக்கு தெரிய வருகிறது. இதன் பிறகு கீர்த்தி சுரேஷ் என்ன முடிவெடுக்கிறார்? என்ன களேபரம் நடக்கிறது என்பதுதான் ‘ரகு தாத்தா’.
கீர்த்தி சுரேஷ், எம்.எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, ரவிந்திர விஜய் என கதாபாத்திரங்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கின்றனர். கதை முழுவதும் தன் தோளில் தான் இருக்கிறது என்பதை உணர்ந்து கீர்த்தி சுரேஷ் சிறப்பாக நடித்திருக்கிறார். செல்வாவாக வரும் ரவிந்திர விஜயும் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி காட்சிக்கு காட்சி மாறி நடிப்பில் ரசிக்க வைக்கிறார். கீர்த்தியின் அண்ணன், அண்ணியாக வருபவர்கள், தப்புத் தப்பாக தமிழ் பேசும் பேங்க் மேனேஜர் கதாபாத்திரங்களின் நகைச்சுவை ஆங்காங்கே சிரிக்க வைக்கிறது. ரோல்டனின் இசையும் படத்திற்கு பலம்.
இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு, பெண்ணியம் பேசும் கீர்த்தி சுரேஷ் தனக்கான வாழ்க்கைத் துணை பற்றி முழுதாக தெரிந்து கொள்ளாமல் எப்படி அவரைத் தேர்ந்தெடுக்கிறார்? திருமணத்தை நிறுத்த இந்தி கற்றுக்கொள்ள ஏன் கீர்த்தி நினைக்கிறார்? பலவீனமான கிளைமாக்ஸ், முதல் பாதியில் காட்டப்படும் கதை இரண்டாம் பாதியில் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்பதாக தடம் மாறுவது என பல விஷயங்கள் திரைக்கதையின் மைனஸ். படத்தில் வன்முறையோ, முகம் சுழிக்க வைக்கும் ஆபாச காட்சிகளோ, வார்த்தையோ இல்லை என்பது ஆறுதல்.