சூரி, அன்னா பென் நடிப்பில் உருவாகியுள்ள படம், ‘கொட்டுக்காளி’. ‘கூழாங்கல்’ வினோத்ராஜ் இயக்கியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. படக்குழுவினருடன் இயக்குநர்கள் லிங்குசாமி, மிஷ்கின், வெற்றிமாறன், பாலாஜி சக்திவேல் உட்பட பல கலந்துகொண்டனர். சிவகார்த்திகேயன் பேசும்போது கூறியதாவது:
‘கூழாங்கல்’ படம் பார்த்து, அதைப்புரிந்துகொள்ள எனக்குக் கஷ்டமாக இருந்தது. நான் உலக சினிமா அதிகம் பார்த்ததில்லை. பிறகு இயக்குநர் வினோத்ராஜிடம் பேசிப் பேசி புரிந்துகொண்டேன். அந்தப் படம் ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் விருது வாங்கியது. அது அறிமுக இயக்குநருக்குக் கொடுக்கும் விருது. இதை ஏற்கெனவே வாங்கியவர் ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் என்று சொன்னார்கள். பிறகு வினோத்ராஜிடம், ‘எந்த ஊர்உங்களுக்கு?’ என்று கேட்டேன். அவர்மதுரை என்றார். மதுரையில் இருந்துபோய், கிறிஸ்டோபர் நோலன் வாங்கியவிருதை வாங்கியிருக்கிறார் என்றால், ஏன் இது வெளியே தெரியவேஇல்லை என்று கேட்டேன். காரணம் தெரியவில்லை. அவருடைய அடுத்த படத்தைத்தயாரிக்க முடிவு செய்தேன். இப்படிப்பட்ட ஒருவரைக் கொண்டாட வேண்டும் என்பதற்காகத் தயாரித்த படம்தான் இது.
இந்த படத்துக்கு என்ன முதலீடு செய்திருக்கிறேனோ, அது போக லாபம் வந்தால், நீங்கள் அடுத்தப் படம் இயக்க அட்வான்ஸ் கொடுப்பேன். இந்த வாழ்க்கையை எனக்குக் கொடுத்த சினிமாவுக்கு என்னால் முடிந்த ‘ரிட்டன்னா’கத்தான்இதைப் பார்க்கிறேன். ‘கொட்டுக்காளி’ நிச்சயமாக புது அனுபவத்தை கொடுக்கும். இதற்குள் எல்லா வகையான அரசியலையும்பேசி இருக்கிறார் இயக்குநர். ஆனால்கதை ஓட்டத்தில் இயல்பாகவே சொல்லியிருக்கிறார். இது வெற்றிபெற்றால் எஸ்கே புரொடக்ஷனில் இருந்து புதிய இயக்குநர்களை அடையாளப்படுத்த முடியும். அதற்காக,நான்தான் வாழ்க்கை கொடுத்தேன் என்று சொல்லமாட்டேன். என்னிடம் ‘நான் தான் உனக்கு வாழ்க்கைக் கொடுத்தேன்’ என்று சொல்லிசிலர் பழக்கிவிட்டார்கள். நான், அது போன்ற ஆள் இல்லை. இவ்வாறு சிவகார்த்திகேயன் கூறினார்.