‘கொட்டுக்காளி’ இயக்குநர்களை மரியாதை செய்யும் படம்: நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

By KU BUREAU

தான் பார்த்து வளர்ந்த இயக்குநர்களை மரியாதை செய்யும் படமாக ‘கொட்டுக்காளி’ இருக்கும் என நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

’விடுதலை’, ‘கருடன்’ படங்களுக்குப் பிறகு நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து ரிலீஸாக இருக்கும் ‘கொட்டுக்காளி’. படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், “நான் முதலில் ‘கூழாங்கல்’ படம் பார்த்தேன். அதைப் புரிந்து கொள்வதற்கு கடினமாக இருந்தது. நான் அதிகம் உலக சினிமாக்கள் பார்த்ததில்லை. அறிமுக இயக்குநர்களுக்காக எடுக்கப்பட்ட படம் ராட்டர்டம் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் தேர்வாகும். முன்பு கிறிஸ்டோபர் நோலன் அந்த விருதை வாங்கினார். அந்த விருதை ‘கூழாங்கல்’ படத்திற்காக வினோத்ராஜ் வாங்கினார் என கேள்விப்பட்ட போது எனக்கு புல்லரித்தது.

வினோத்ராஜை கொண்டாட வேண்டும் என்பதற்காகவே அவருடைய அடுத்தப் படத்தை நான் தயாரிப்பதாக சொன்னேன். இந்தப் படம் வெற்றியடைந்து நான் முதலீடு செய்தது போக, எனக்கு லாபம் வந்தால், அதை முதலில் எடுத்து இயக்குநர் வினோத்தின் அடுத்தப் படத்திற்கு முன்பணமாகக் கொடுத்து விடுவேன். இன்னும் கொஞ்சம் லாபம் கிடைத்தால் வினோத் போன்ற இரண்டு இயக்குநர்களுக்கு படம் செய்ய முன்பணம் கொடுப்பேன். எனக்கு வாழ்க்கைக் கொடுத்த இந்த சினிமாவிற்கு என்னால் முடிந்த ஒரு சிறிய உதவியாக இதைப் பார்க்கிறேன்.

நான் காலேஜ் படிக்கும் போது தான் அதிக சினிமா பார்த்தேன். அப்போது பாலாஜி சக்திவேல், கெளதம் மேனன் எனப் பலரது படங்களைப் பார்த்து தான் வளர்ந்தேன். இவர்களுக்கான ட்ரிபியூட்டாக ‘கொட்டுக்காளி’ படத்தைப் பார்க்கிறேன். இந்தப் படத்திற்கு இசை இல்லை என்று வினோத்ராஜ் சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது. சூரி, அன்னா படத்தில் சிறப்பாக நடித்துள்ளனர். ’விடுதலை’ படத்தை விட ‘கொட்டுக்காளி’ படத்தில் சூரியின் நடிப்பு நிச்சயம் ஒரு மார்க் அதிகம் வாங்கும் என நம்புகிறேன். ’விடுதலை2’, ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’ என இந்த வருடம் சூரிக்கு ரொம்பவே ஸ்பெஷல்.

பாலாஜி சக்திவேல், மிஷ்கின், வெற்றிமாறன் என அனைவரும் இந்தப் படத்தை இவ்வளவு பாராட்டி இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் இயக்குநர்களாவது ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE