கேபி சுந்தராம்பாள் பிறந்தநாள் பகிர்வு! கதையைத் தேர்ந்தெடுத்த ரியல் ஹீரோயின்!

By காமதேனு

கண்களை மூடிக் கொண்டு, அவ்வை என்று நினைத்தால் நம் மனக்கண்ணில் தெரியும் முகம் சுந்தாராம்பாளுடையது. நடிகை, பாடகி, மேடைக்கலைஞர் என பன்முகம் கொண்ட கே.பி. சுந்தராம்பாளின் 115 ஆவது பிறந்தநாள் இன்று. அவர் பற்றிய பல சுவாரஸ்யத் தகவல்களை இங்கு பார்க்கலாம்.

* கே.பி. சுந்தராம்பாள் ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்தால், அந்த கதாபாத்திரமாக மாறிவிடுவார். ஔவையார், காரைக்கால் அம்மையார், கௌந்தி அடிகள், பக்த நந்தனார் என அவரை அந்த கதாபாத்திரமாக மட்டும்தான் பார்க்க முடியுமே தவிர கே.பி. சுந்தராம்பளாக அவரைத் திரையில் தனித்துக் காண்பது கடினம்.

* ‘பணத்துக்காக எந்த வேடத்தையும் ஏற்க மாட்டேன்’ என்று கொள்கையோடு இருந்தவர் சுந்தராம்பாள். ஒருமுறை கலைஞர் கருணாநிதியின் 'பூம்புகார்' படத்தில் கெளந்தி அடிகள் கதாபாத்திரத்திற்கு வந்த வாய்ப்பை முதலில் நடிக்க மறுத்தார் சுந்தராம்பாள்.

ஆன்மிகவாதியான சுந்தராம்பாள் கலைஞரின் நாத்திக வசனத்தில் நடிக்க மாட்டேன் என்றார். ஆனால், அப்படி இல்லை என சுந்தராம்பாளிடம் பேசி, நடிக்க சம்மதிக்க வைத்தார் கலைஞர்.

கே.பி. சுந்தராம்பாள்

* மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் திரைக்கலைஞர் கே.பி. சுந்தராம்பாள் என்பது குறிப்பிடத்தக்கது.

* சுந்தராம்பாள் மொத்தமே நடித்துள்ள படங்கள் பன்னிரண்டு. ஆனால், அத்தனையும் அவரைத் தேடி வந்த வாய்ப்புகளில் அவர் தேர்ந்தெடுத்து நடித்தவை. அஸந்தாஸ் நந்தனார், ஒளவையார், மணிமேகலை, பூம்புகார், திருவிளையாடல் ஆகியவை முக்கியமானவை. 'ஒளவையாரைப் போல் எனக்குப் புகழும், பொருளும் தந்த படம் வேறெதுவுமில்லை' என்பார் பெருமையுடன்.

கேபி சுந்தராம்பாள்

* கம்பெனி நாடகங்களிலும், ஸ்பெஷல் நாடகங்களிலும் நடித்துக் கொண்டிருந்த இவர் 1927 ம் ஆண்டில் இலங்கை சென்றிருந்த போது, அங்கே எஸ்.ஜி.கிட்டப்பாவுடன் இரண்டு ஸ்பெஷல் நாடகங்களில் நடிக்க அழைக்கப்பட்டார். பின்பு இருவருக்கும் திருமணம் நடந்தது. ஆனால், 28 வயதில் கிட்டப்பாவின் எதிர்பாராத மரணம் சுந்தரம்பாளை நிலைகுலைய வைத்தது. கணவனை இழந்த 25 வயதில் இனிமேல் வெள்ளை உடைதான் அணிவேன், யாருடனும் ஜோடி சேர்ந்து நடிக்க மாட்டேன் என உறுதி பூண்டு அதை இறுதிவரை கடைப்பிடித்தார்.

*நடிப்பது மட்டுமல்லாது சிறந்த பாடகியாவும் விளங்கினார் சுந்தராம்பாள். அந்த காலத்திலே பாடலுக்காக ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிய பாடகி என்ற பெருமையையும் பெற்றவர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE