சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கு: கணவர் ஹேமந்த் விடுதலை!

By KU BUREAU

சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் இருந்து அவரது கணவர் ஹேமந்தை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை கதாபாத்திரம் மூலம் புகழ்பெற்றவர் நடிகை சித்ரா. இவர் ஹேமந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணம் ஆன சில நாட்களிலேயே இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2020ல் தங்கி இருந்த ஹோட்டல் அறையிலேயே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் சித்ரா. இந்த விஷயம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது மரணத்திற்குக் காரணம் ஹேமந்த்தான் என சித்ராவின் பெற்றோர் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதனால், காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார்.

சித்ரா இறந்தவுடன் தானும் இறந்துவிட நினைத்ததாகவும் ஆனால், தன் மீது பழி சொல்லியவர்கள் முன்பு தான் குற்றமற்றவன் என நிரூபிப்பேன் எனவும் ஹேமந்த் சொல்லி இருந்தார். சித்ரா தொடர்பான வழக்கு திருவள்ளூரில் உள்ள ஒருங்கிணைந்த மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரேவதி, ஹேமந்த்துக்கு எதிராக போலீஸார் வலுவான சாட்சிகளை சமர்ப்பிக்காததால் அவர் நிரபராதி என சொல்லி விடுதலை செய்துள்ளார். விடுதலை என அறிவிக்கப்பட்டதும் நீதிமன்றத்திலேயே ஹேமந்த் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE