இந்தப் பேச்சு என்னை காயப்படுத்திவிட்டது... நடிகை ரோஜாவுக்காக களமிறங்கிய ரம்யாகிருஷ்ணன்

By காமதேனு

நடிகையும் அமைச்சருமான ரோஜாவைப் பற்றிய அவதூறுப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தும் ரோஜாவுக்கு ஆதரவாகவும் நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், ராதிகா ஆகியோர் பேசியுள்ளனர்.

நடிகையும், ஆந்திரப்பிரதேச மாநில சுற்றுலாத்துறை அமைச்சருமான நடிகை ரோஜா மீது அவதூறு பரப்பும் விதமாக தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி பேசியுள்ளார். அதாவது நடிகை ரோஜா ஆபாச படத்தில் நடித்ததாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.

இந்த விஷயம் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயத்திற்காக ரோஜா இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தனது கண்டனத்தை தெரிவித்து கண்ணீர் விட்டு அழுதார். மேலும் தன்னைப் பற்றி அவதூறாகப் பேசியவர்கள் மீது நான் மானநஷ்ட வழக்கு போடப்போகிறேன் என்றும் சொல்லி இருந்தார்.

இந்த நிலையில், நடிகை ராதிகா மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் வீடியோ மூலம் ரோஜாவுக்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளனர். இந்த சர்ச்சை குறித்து நடிகை ரம்யா கிருஷ்ணன் பேசியுள்ளதாவது, ”முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்ய நாராயணன் பேசியது கண்டிக்கத்தக்கது. ரோஜாவை பற்றி இந்தப் பேச்சு என்னை காயப்படுத்தி உள்ளது. நாங்கள் பாலியல் வன்கொடுமை, பெண் சிசுக்கொலை உள்ளிட்ட பல பிரச்சினைகளை அனுபவிக்கிறோம்.

அவரது மோசமான விமர்சனம் ரோஜாவை மட்டுமல்லாமல் அவருடைய குடும்பத்தையும் குறி வைத்தது போல் இருக்கிறது. இதனை கண்டிப்பாக பொறுத்துக் கொள்ள முடியாது. எனவே, பிரதமர் மோடி இதில் தலையிட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நாட்டில், ஒரு பெண்ணை இவ்வளவு கீழ்த்தனமாக பேசியவரை ஒருபோதும் மன்னிக்க கூடாது” என்று ஆவேசமாகப் பேசியுள்ளார்.

அதேபோல் நடிகை ராதிகாவும் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு, "ஒரு தோழியாகவும் அரசியல்வாதியாகவும் ரோஜாவின் தைரியம் எனக்கு மிகவும் பிடிக்கும். பெண்கள் அரசியலில் ஒரு அங்கமாக இருக்கிறார்கள். பெண்களை பாரத மாதமாக பார்க்கப்படும் நம் நாட்டில், நடிகை ரோஜா மீதான இப்படிப்பட்ட ஒரு விமர்சனம் வருத்தத்தை அளிக்கிறது. இதை நினைத்தாலே மிகவும் கேவலமாக இருக்கிறது. ஒரு அமைச்சரை ஆபாச படத்தில் நடித்தவர். அவர் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் விமர்சிக்க யாருக்கும் எந்த தகுதியும் கிடையாது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE