சென்னை: நடிகர் அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தில் இருந்து புது போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்திருக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்னொரு பக்கம் இதன் புரோமோஷன் பணிகளும் தீவிரமாகியுள்ளது. படத்தில் இருந்து அஜித், த்ரிஷா தொடர்பான போஸ்டர் வெளியானதை அடுத்து, தற்போது பின்னணியில் அஜித் இருக்க, வில்லனாக மிரட்டும் ஆரவ்வின் கதாபாத்திர போஸ்டர் வெளியாகி இருக்கிறது. இதில் மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஆரவ்.
ஆரவ் கதாபாத்திரம் பற்றி இயக்குநர் மகிழ் திருமேனி கூறியிருப்பதாவது, “பல கதைகளுடனும் திருப்பங்களுடனும் வரும் வில்லன் மைக்கேல் நிச்சயம் உங்கள் கவனத்தைக் கவர்வான். 'மைக்கேல்' கதாபாத்திரத்தை நான் உருவாக்கி முடித்ததும், இந்தியத் துறையில் பல பெரிய நடிகர்களின் பெயர்கள் தோன்றிக்கொண்டே இருந்தன. ஆனால், ஆரவ்வின் திறமை பக்கம் என் மனம் சாய்ந்தது.
'கலகத்தலைவன்' படத்தின் போதே அவரது அர்ப்பணிப்பை நான் பார்த்திருக்கிறேன். அந்த விஷயம்தான் இந்தக் கதாபாத்திரத்திற்கு அவரை தேர்வு செய்ய வைத்தது. ஆரவ்வின் பெயரை அஜித் சாரிடம் நான் சொன்னபோது, இயக்குநரின் தேர்வில் தலையிடுவதில்லை என்று சொல்லி மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார். என்னுடைய சாய்ஸ் சரியானது என்று ஆரவ்வும் நிரூபித்து இருக்கிறார். சில ஷெட்யூல் முடித்த பிறகு அஜித் சாரும் ஆரவ் மீது தன் திருப்தியை வெளிப்படுத்தினார்" என்றார்.
'விடாமுயற்சி' படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து முடிந்துள்ளது. இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.