திரை விமர்சனம் - ‘அந்தகன்’

By KU BUREAU

பாலிவுட்டில் கடந்த 2018ம் ஆண்டு நடிகர் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான ‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக் தான் ‘அந்தகன்’.

பார்வையற்ற மாற்றுத்திறனாளியான பிரஷாந்த் ஒரு பியானோ கலைஞன். லண்டன் சென்று அங்கு மிகப்பெரிய பியானோ கலைஞராக ஆக வேண்டும் என்பது கனவாக இருக்கிறது. எதிர்பாராத சாலை விபத்தில், ப்ரியா ஆனந்த்தை பிரஷாந்த் சந்திக்க நேர்கிறது. அவருடன் நட்பு கிடைக்க, ப்ரியா ஆனந்த் பப்பில் பியானோ இசைக்கும் வேலை பிரஷாந்துக்கு கிடைக்கிறது. அந்த பாருக்கு வரும் நடிகர் கார்த்திக் பிரஷாந்த் இசை பிடித்துப் போய், தனது மனைவி சிம்ரனிடம் பிரஷாந்த்தை பியோனோ வாசித்துக் காட்ட அழைப்பு விடுக்கிறார். அடுத்த நாள் கார்த்திக் வீட்டுக்கு செல்லும் பிரஷாந்த் அங்கு நடக்கும் ஒரு கொலைக்கு சாட்சியாகிறார். பார்வையிழந்த ஒருவர் எப்படி கொலைக்கு சாட்சியாக முடியும்? உண்மையிலேயே பிரஷாந்துக்கு கண் பார்வை தெரியாதா? என்ன பிரச்சினைகளை எல்லாம் அவர் சந்திக்கிறார் என்பதுதான் ‘அந்தகன்’.

கண் பார்வை தெரியுமா தெரியாதா என்ற சந்தேகத்தை சுற்றி இருப்பவர்களுக்கு எழுப்பி, கதையில் நடக்கும் களேபரத்தை கடைசி வரை சமாளித்து, கிடைக்கற கேப்பில் எல்லாம் காமெடியில் சிக்ஸர் அடிக்கும் கதாபாத்திரம் பிரஷாந்துக்கு. கதை தன் தோளில் இருக்கிறது என்பதை உணர்ந்து சரியாக நடித்திருக்கிறார். கொலை நடக்கும் சமயம், தன் கண் முன்னே நடக்கும் விஷயங்களை பதட்டத்தோடு பார்ப்பது போன்ற காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். 90’ஸ் கிட்ஸ் பார்த்து ரசித்த பிரஷாந்த்- சிம்ரன் ஜோடி இந்தப் படத்தில் டாம் அண்ட் ஜெர்ரி.

எதையும் பயம் இல்லாமல் தைரியமாக, வில்லத்தனத்தோட அணுகும் கதாபாத்திரம் சிம்ரனுக்கு. அதை அட்டகாசமா கையாண்டிருக்கிறார். ஆனால், எளிதில் முடிந்து விடும் பிரச்சினைக்குக் கூட கொலை வரை சிம்ரன் செல்வது ஏன்? அவர் அடுத்தடுத்து செய்யும் கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் வலுவான காரணங்கள் என்ன போன்ற கேள்விகளுக்கு அடுத்தடுத்த காட்சிகளில் விடையில்லை. நடிகை ப்ரியா ஆனந்துக்கு குறைவான காட்சிகள் என்றாலும் நிறைவாக நடித்திருக்கிறார். நடிகர்கள் கே.எஸ். ரவிக்குமார், கார்த்திக், ஊர்வசி, சமுத்திரக்கனி, யோகிபாபு என நட்சத்திரங்கள் நிறைய பேர் இருந்தாலும், அத்தனைப் பேரும் கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள்.

ஒரிஜினல் வெர்ஷனை அதிகம் மாற்றாமல், தமிழுக்கும் அப்படியே கொண்டு வந்து கவனிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் தியாகராஜன். போலவே படத்தில் தொழில்நுட்ப ரீதியாகவும் பெரிய குறைகள் இல்லை. சந்தோஷ் நாராயணின் இசை கவனிக்க வைக்கிறது. படத்தின் ஆரம்பத்தில் வரும் பப் சாங் கேட்டதும் பிடிக்கும் ரகம்.

லண்டன் போய் பெரிய இசைக்கலைஞராக வேண்டும் என ஆசை இருக்கும் பிரஷாந்த், ஏன் வலிய சென்று போலீஸில் கொலை பற்றி சொல்ல வேண்டும்? பிரஷாந்த் பின்னணி என்ன? போன்ற கேள்விகளுக்கு பதில் இல்லை. படம் ஆரம்பித்த முதல் 20 நிமிடங்கள் திரையரங்கள் ரசிகர்கள் நெளிகிறார்கள். அத்தனை மெதுவாக நகர்ந்து செல்லும் படம் இரண்டாம் பாதியில் விறுவிறுவென வேகம் எடுக்கிறது. ‘அந்தகன்’ நடிகர் பிரஷாந்துக்கு கம்பேக் தான்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE