பிரகாஷ் ராஜ் ஒரு நல்ல நடிகர். ஆனால், ஒரு மோசமான போராளி என சமூக ஆர்வலரும், கன்னட நடிகருமான சேத்தன் குமார் அஹிம்சா விமர்சனம் செய்துள்ளார்.
இந்துத்துவா குறித்து சர்ச்சைக்குரிய ட்விட்டுகளால் கர்நாடகாவில் பரபரப்பாக பேசப்படுபவர்களில் சமூக ஆர்வலரும், நடிகருமான சேத்தன் குமார் அஹிம்சாவும் ஒருவர். இந்துத்துவா குறித்த தனது ட்விட் மூலம் மத உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக பெங்களூரு நகர காவல்துறையினரால் கடந்த ஆண்டு இவர் கைது செய்யப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக எப்போதும் கருத்து தெரிவிக்கும் சேத்தன் குமார் அஹிம்சா, தற்போது மோடிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இருந்து இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் நேற்று ஒரு ட்விட் வெளியிட்டிருந்தார். அதில் வினேஷ் போகத் தகுதி நீக்கத்திற்கு பிரதமர் மோடி தான் காரணம் என்பது போன்ற கார்ட்டூன் இடம் பெற்றிருந்தது. அதற்கு நடிகர் சேத்தன் குமார் அஹிம்சா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வினேஷ் போகத்தின் தகுதி நீக்கத்துக்கு பிரதமர் மோடிதான் காரணம் என்று பிரகாஷ் ராஜின் பதிவு தெரிவிக்கிறது. இந்தியாவின் அனைத்து ஆதாயங்களுக்கும் பிரதமர் மோடியை கண்மூடித்தனமாக புகழ்ந்து பேசுபவர்கள் அறிவிலிகள் என்பது போல, இந்தியாவின் அனைத்து பிரச்சினைகளுக்கும் மோடி மீது பிரகாஷ் ராஜ் போன்றவர்கள் பழி போடுகிறார்கள். பிரகாஷ் ராஜ் நல்ல நடிகர். ஆனால், ஒரு மோசமான போராளி" என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சேத்தனின் கருத்துக்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் தொடர்பாக பிரகாஷ் ராஜ் மோடியின் பெயரை எங்கும் குறிப்பிடவில்லை. ஆனால் நீங்கள் மோடியை பதிவில் கொண்டு வந்துள்ளீர்கள் என்று சேத்தனுக்கு எதிராக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
» வினேஷ் போகத் தகுதி நீக்கத்துக்கு மோடி காரணமா? பிரகாஷ் ராஜ் வெளியிட்ட கார்ட்டூன்
» கர்நாடகாவை மிரட்டும் டெங்கு: பெங்களூருவில் காவல் துறை அதிகாரி பலி