சென்னை: அதிக கிராஃபிக்ஸ் காட்சிகள் கொண்ட முதல் திரைப்படமாக ‘மாயன்’ இந்த மாதம் செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாகிறது. இதில் நடிகை பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
ஜெ.ராஜேஷ் கன்னா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘மாயன்’. இந்தப் படத்தில் வினோத் மோகன் மற்றும் பிந்து மாதவி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஆங்கில பதிப்பில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்திய திரையுலகில் உருவாக்கப்பட்டதிலேயே அதிக கிராஃபிக்ஸ் காட்சிகளுடன் நேரடியாக ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் ’மாயன்’ எனப் படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படம் ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் மொழியிலும் வெளியிடப்பட உள்ளது. ஃபேண்டஸி, திரில்லர் மற்றும் வரலாறு என மூன்றுவித ஜானரில் நகரும் வகையில், இந்த படத்தின் கதை எழுதப்பட்டு இருக்கிறது. இவை அனைத்தும் ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் முதல் பாகத்தில் மாயன் காலண்டர் மற்றும் உலகின் முடிவு பற்றியும், இரண்டாவது பாகத்தில், உலகம் அழிந்ததா இல்லையா? மாயனுக்கும் கடவுளுக்கும் என்ன சம்மந்தம் என்பது பற்றியும் உருவாக்கி இருக்கிறார்கள். முதல் பதிப்பை விட இரண்டாம் பதிப்பில் கூடுதல் கிராபிக்ஸ் காட்சிகள் வைத்திருக்கிறார்கள். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி தமிழ் பதிப்பை வெளியிடுவதற்கான பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது.
» உறவினர்களால் தாக்கப்பட்டேன்: நடிகர் சத்யராஜ் மகள் பகிர்ந்த அதிர்ச்சி சம்பவம்!
» நிச்சயதார்த்தம் முடிந்தது... புகைப்படங்களை வெளியிட்ட நாகர்ஜூனா!