தெருக்கூத்துப் பின்னணியில் உருவாகியுள்ள ‘ஜமா’ படம், கடந்த 2-ம் தேதி வெளியானது. ‘கூழாங்கல்’ சாய் தேவானந்த் தயாரித்துள்ள இதில் அறிமுக இயக்குநர் பாரி இளவழகன் இயக்கி, நாயகனாக நடித்துள்ளார். இளையராஜா இசை அமைத்துள்ள இந்தப் படத்தில், அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ணா தயாள், கே.வி.என்.மணிமேகலை, வசந்த் மாரிமுத்து, சிவமாறன் உட்பட பலர் நடித்துள்ளனர்.
நல்ல விமர்சனத்தைப் பெற்றுள்ள இந்தப் படம் பற்றி, பாரி இளவழகன் கூறும்போது, “கூத்துப் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வழக்கத்துக்கு மாறான படம் என பார்த்தவர்கள் பாராட்டுகிறார்கள். இசை அமைத்துள்ள இளையராஜா, நடித்துள்ள அனைவருக்கும் இந்தப் பாராட்டில் பங்கு உண்டு.
சில திரையரங்குகளில் காலை காட்சிகளில் மட்டும் படத்தை வெளியிட்டுள்ளனர். மக்கள் வர நினைக்கும் மாலை நேரக் காட்சிகளிலும் படத்தைத் திரையிட்டால் இன்னும் வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறோம்.
நடிகராகவும் இயக்குநராகவும் தனிப்பட்ட முறையில் கிடைக்கும் பாராட்டுகள் என்னை ஊக்கப் படுத்துவதாக இருக்கிறது. அடுத்து நடிப்பதா, இயக்குவதா அல்லது இயக்கி நடிப்பதா என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை” என்றார்.
» ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு அடுத்த அதிர்ச்சி: மல்யுத்த வீராங்கனையின் சகோதரி கைது
» “என் உத்வேகம் நொறுங்கியது!” - வினேஷ் போகத் ஓய்வு அறிவிப்பு